புதுடெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார்.
இதன்படி நவம்பர் 7-ம் தேதி தேர்தல்கள் தொடங்கி நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடையும். 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை வருகிற டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட மிஜோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ம் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 7-ம் தேதி முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக நவம்பர் 17-ம் தேதி 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் ஆண் வாக்காளர்கள் 8.2 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 7.8 கோடி பேரும் உள்ளனர்.
முதல் முறையாக 60.2 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 5 மாநிலங்களில் உள்ள 679 தொகுதிகளுக்கு 1.77 லட்சம் வாக்குச் சாகுபடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த சந்திப்பின்போது தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் உடனிருந்தனர்.