மதுரை அருகே விபத்தில் உயிரிழந்த மதிமுக நிர்வாகிகள் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய வைகோ

By என்.சன்னாசி

மதுரை: மதுரை அருகே விபத்தில் உயிரிழந்த மதிமுக நிர்வாகிகளின் வீடுகளுக்கு இன்று நேரில் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, "கட்சி ஒரு போதும் உங்களைக் கைவிடாது" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த திங்கள்கிழமை அதிகாலையில், மதுரை மாவட்டம் மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்ற சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மதிமுக மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் பச்சைமுத்து, அவரது சகோதரரும் மாநகர தொண்டரணி அமைப்பாளருமான அமல்ராஜ், மாநகர இளைஞரணி துணைச் செயலாளர் புலி சேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.

சென்னையில் கட்சி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய போது, இவர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், இந்த விபத்தில் பச்சைமுத்துவின் மனைவி வளர்மதி, மதிமுக நிர்வாகியான பிரபாகரன் ஆகியோரும் காயமடைந்தனர். விபத்தில் பலியான மூவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்கு பிறகு கீரைத்துறை மின்மாயனத்தில் தகனம் செய்யப்பட்டன. இறுதிச் சடங்கில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதுடன் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது துணைவியார் ரேணுகா தேவி ஆகியோர் இன்று மதுரை வந்தனர். அவர்கள் காமராஜர்புரம் பகுதியிலுள்ள பச்சைமுத்து, அமிர்தராஜ், புலிசேகர் ஆகியோரது வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

அப்போது வைகோ கூறுகையில், ”கட்சிக்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர்கள். அவர்களது குடும்பத்தினரை கட்சி ஒருபோதும் கைவிடாது. கட்சியின் சார்பில், நிதி திரட்டி மூவரது குடும்பத்தினருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். உள்ளூரிலுள்ள பூமிநாதன் எம்எல்ஏ, மாநகர மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கவனித்துக் கொள்வர்” என்றார்.

மதிமுக அவைத் தலைவர் அர்ஜூன மூர்த்தி, பொருளாளர் செந்திலதிபன், துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், சாத்தூர் எம்எல்ஏ-வான ரகுராமன், மாநகர் மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வைகோவுடன் வந்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE