‘இஸ்ரேலில் நடக்கும் படுகொலைகளுக்கு எதிராக விரைந்து குரல் கொடுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், மணிப்பூர் படுகொலைகளில் நீண்ட மவுனம் காப்பது வெட்கக்கேடானது’ என்று பாஜகவுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி முழங்கியுள்ளது.
சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை அதன் தலைவர்களில் ஒருவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் செங்குத்துவாக்கில் பிளந்திருக்கிறார். கட்சியை உடைத்த அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இணைந்து, மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா(ஷிண்டே) - பாஜக கூட்டணி அரசில் ஐக்கியமாகி இருக்கிறார். இந்த வகையில் துணை முதல்வராகி இருக்கும் அஜித் பவார், சரத் பவாரையும் பாஜகவுக்கு வந்துவிடுமாறு சீண்டி வருகிறார்.
அஜித் பவாரை வைத்து தங்கள் கட்சியை பிளந்த பாஜக மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் எரிச்சலில் உள்ளனர். வாய்ப்பு கிடைக்கும்போது பாஜகவை சாடவும் அவர்கள் தவறுவதில்லை. தற்போது இஸ்ரேல் விவகாரத்தை முன்வைத்து, பாஜக மீது கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான கிளைட் கிரஸ்டோ.
“உலகின் எந்த மூலையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டாலும் அதற்கு எதிராக குரல் கொடுத்தே ஆக வேண்டும். சற்றும் தயங்காது அவற்றை கண்டித்தே ஆக வேண்டும். இஸ்ரேலில் அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலும் கடும் கண்டனத்துக்கு உரியது. இஸ்ரேல் உட்பட உலகின் எந்த மூலையில் படுகொலை நிகழ்ந்தாலும் அவை கடும் கண்டனத்துக்கு உரியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இஸ்ரேல் படுகொலைக்கு விரைந்து கண்டனம் தெரிவிக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், மணிப்பூர் படுகொலைகளில் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்? மணிப்பூரும் இந்த உலகில்தான் இருக்கிறது; குறிப்பாக இந்தியாவில் இருக்கிறது என்று அவர்களுக்கு எவரேனும் எடுத்துச் சொல்ல வேண்டும். உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் பிரச்சினைகளில் விரைந்து கருத்தும், கண்டனமும் தெரிவிப்பவர்கள், சொந்த மக்களின் துயரத்தை கண்டும் காணாது இருப்பதும், அது குறித்து வாய் திறக்காது மவுனித்து இருப்பதும் வெட்கக்கேடானது” என்று சீறி உள்ளார் கிளைட் கிரஸ்டோ.