பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் உயர்வு: பாசனத்துக்கு முன்கூட்டியே நீர் திறக்கப்படுமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: கடந்த ஆண்டை போல் தாமதமாக திறக்காமல் இந்த ஆண்டு ஒரு போக பாசனத்துக்காக பெரியாறு கால்வாயில் முன்கூட்டியே தண்ணீர் திறக்க ஒரு போக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம், தமிழக அரசுக்கு தண்ணீர் திறக்க ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பெரியாறு பாசனத்தை நம்பி மதுரை மாவட்டத்தில் 19,500 ஏக்கர் ஒரு போக நிலங்களிலும், 45 ஆயிரம் ஏக்கர் இரு போக நிலங்களிலும் விவசாயிகள் நெல் விவசாயம் செய்கின்றனர். பேரணையில் இருந்து கள்ளந்திரி கால்வாயில் இரு போக பாசனத்திற்கும், திருமங்கலம் கால்வாயில் ஒரு போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கின்றனர்.

கடந்த ஜூன் 3ம் தேதி இரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், இதுவரை ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. பெரியாறு, வைகை அணையில் போதுமான தண்ணீர் இருந்தால் மட்டுமே ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது பெரியாறு அணை நீர்மட்டம் 30.95 அடியை எட்டியுள்ளது.

அணைக்கு 852 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வைகை அணை நீர் மட்டம் 57 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 1,275 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெரியாறு, வைகை அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் முன்கூட்டியே ஒரு போக திருமங்கலம் பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒரு போக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும், பெரியாறு ஒரு போக பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து வைகை திருமங்கலம் பிரதான பாசன கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் எம்.பி.ராமன் கூறியதாவது: "தற்போது பெரியார், வைகை அணை நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளதால், ஒரு போக பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்கலாம். கடந்த ஆண்டு, மிக தாமதமாக அக்டோபர் மாதம் கடைசியில் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதுவும், விவசாயிகள் போராட்டம் வெடித்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது. உரிய காலத்தில் தண்ணீர் திறக்காததால் பல ஆயிரம் ஏக்கர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டன.

பருவம் தவறி பாசனம் செய்ததால் மகசூல் குறைந்தது. அறுவடை செய்ய முடியாமலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய ரூ.45 ஆயிரம் செலவாகிறது. கடந்த ஆண்டு இந்த சாகுபடி செலவைக் கூட எடுக்க முடியவில்லை. வைக்கோலை கேரள வியாபாரிகள் நேரடியாக வந்து ஒரு ஏக்கர் வைக்கோலை ரூ.19 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கொடுத்து வாங்கிச் செல்வார்கள். ஆனால், மழை பெய்து வைக்கோலும் அழுகிப் போனதால் கேரள விவசாயிகள் அதனை வாங்க வரவில்லை.

ஒரு போக பாசனத்தை நம்பி 19 ஆயிரத்து 500 ஏக்கர் நெல் விவசாயம் நடக்கிறது. இந்த ஒரு போக விவசாயம் சிறப்பாக நடக்க வேண்டுமென்றால், செப்டம்பர் முதல் வாரம் தண்ணீர் திறக்க வேண்டும். கடந்த ஆண்டு விவசாயத்திற்கு திறக்காமல் விட்டதால் கடைசியில் மழை பெய்து, அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் கடலில் சென்று வீணானது. இப்படி யாருக்கும் பயனில்லாமல் வீணாகும் தண்ணீரை சரியான நேரத்தில் பாசனத்துகாக திறந்துவிட்டால் உணவு உற்பத்தியை பெருக்க முடியும்." என்று ராமன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE