மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகளில் மற்ற கட்சிகளை விட திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் முந்திக்கொண்டு விட்டன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக மக்களவைத் தேர்தல் குறித்து தனது கூட்டணி வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டது.
இம்முறையும் விசிக திமுக கூட்டணியில் தொடரவே விரும்புகிறது. ஆனால் கடந்த முறை ஒதுக்கியது போல 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும், தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் டிமாண்டாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, பாஜகவுக்கு பை பை சொன்ன கையோடு விசிகவுக்கு தூண்டில் போட்டுள்ளது அதிமுக. அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விசிக தலைவர் திருமாவளவனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை கிளப்பியது.
இதையெல்லாம் பார்த்துவிட்டு, இது விசிகவுக்கு நல்ல வாய்ப்பு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். அதேசமயம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ’’பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகினால், அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா?’’ என செய்தியாளர்கள் கேட்டபோது, ‘’முதலில் நடக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்’’ என மையமாகச் சொல்லிச் சென்றார் திருமாவளன். “பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதுதான் அதிமுகவுக்கு நல்லது” என்றெல்லாம் கூட அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கூட்டணி விவகாரத்தில் விசிகவின் நிலைப்பாடு மற்றும் அதிமுக உறவு உள்ளிட்டவை குறித்து விசிக எம்பி-யான ரவிக்குமாரிடம் பேசினோம்.
பாஜக – அதிமுக கூட்டணி முறிவை எப்படி பார்க்கிறீர்கள்..?
இது குறித்து எங்கள் தலைவர் திருமாதான் பேச வேண்டும். இருந்தாலும் இது எல்லாம் நாடகம் என்ற வகையில் தான் உள்ளது. தேர்தலில் வென்ற பிறகு பாஜகவுக்கு இவர்கள் ஆதரவு கொடுக்கமாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்? அதனால் இவர்கள் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்கள். அதனால் நாங்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கூட்டணி விஷயத்தில் திமுக – விசிக உறவு எப்படி உள்ளது?
நன்றாகவே உள்ளது. திமுக தலைவர்களுடனான எங்கள் தலைவரின் நட்பு ஆழமானதாக உள்ளது. பாஜகவை எதிர்க்க வேண்டுமென்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். அதே நேர்கோட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் எங்கள் இலக்கை நிச்சயம் அடைவோம்.
விசிக இம்முறை தனி சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதா..?
அதனை தலைவர் அவர்கள் தான் சொல்வார்.
விசிகவின் வளர்ச்சி எப்படி உள்ளது?
இந்திய அரசியல் கட்சிகளில் விசிக வேகமாக வளர்ந்து வருவதாகத்தான் நான் பார்க்கிறேன். தமிழகம் மட்டுமல்ல அதனைத் தாண்டி கர்நாடகா மற்றும் ஆந்திரா, தெலங்கானாவிலும் தலைவர் மீது அன்பு வைத்துள்ளனர். ஆக, விசிக எல்லைகளை கடந்து வேகமாக வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து உங்கள் பார்வை..?
தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கான நல்ல வாய்ப்பாகத்தான் இதை நான் பார்க்கிறேன். ஏற்கெனவே நடந்த சாதிவாரி கணக்கெடுப்பின் போதுதான் ஆதிதிராவிடர் மக்கள் அநீதிக்கு உள்ளானார்கள். அதனால் தமிழக அரசு உடனே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப 21% ஆக உயர்த்த வேண்டும். பீகார் மாநில அரசு மேற்கொண்டிருப்பதைப் போல எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.