அதிமுக ஆதரிக்காவிட்டாலும் மோடிதான் பிரதமர்; திடமான முடிவில் பாஜக!

By குள.சண்முகசுந்தரம்

அண்ணாமலையின் அதிரடிகளால் அதிமுக கூட்டணியை தொலைத்துவிட்டு நிற்கிறது பாஜக. “இனிமேல், எந்தத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டு இல்லை” என அடித்துச் சொல்கிறது அதிமுக. “மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி மலரும்” என்று ஆவல் கொள்கிறது பாஜக!

கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; பாஜகவுக்குத்தான் பதற்றம். அதிமுக கூட்டணி இல்லாவிட்டால் மோடியே ராமநாதபுரத்தில் நின்றாலும் கரைசேர்வது கடினம் என்பது பாஜகவினருக்கும் தெரியும். மோடிக்கே அந்த நிலை என்றால், அதிமுக கூட்டணி இல்லை என்றால் மற்றவர்களின் நிலையைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதனால் தான் பாஜக தரப்பில் பதறுகிறார்கள். தமிழகத்தில் தங்களுக்கு பெருவெற்றி கிட்டாது போனாலும் கவுரவமான வாக்குகளையாவது வாங்கிக் காட்டவேண்டுமே என்ற கவலை அவர்களுக்கு.

அதனால் தான் பாஜக மாநில நிர்வாகிகள் பலரும் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு தவம் கிடக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக பாஜகவில் இருக்கும் அண்ணாமலை எதிர்ப்பாளர்களும் தங்கள் இஷ்டத்துக்கு வதந்திகளை பற்றவைத்துப் போடுகிறார்கள். முன்னவர்களின் எதிர்பார்ப்பு அதிமுகவுடன் கூட்டணி; பின்னவர்களுக்கு அண்ணாமலையை மாற்றமாட்டார்களா என்ற ஏக்கம்!

நடைபயணத்தில் அண்ணாமலை...

கடைசியாக எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுக்கு டெல்லியில் பஜக தலைவர் நட்டாவை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுத்து அனைத்து உதவிகளையும் செய்தவர் பாஜக மகளிரணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் என்கிறார்கள். அதைவைத்து அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தமிழகத்து ஏக்நாத் ஷிண்டே உருவாகிறார் என சிலர் சிண்டு முடிந்தார்கள். இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த வேலுமணி, “நான் என்றைக்கும் அதிமுககாரன்” என்று பதிலடி கொடுத்தார். அப்போதும் விடாத சிலர், கோவை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள் நான்கு பேர் சந்தித்ததையும் கலக அரசியலாக்கினார்கள்.

இந்த நிலையில், அண்ணாமலையை மாற்றிவிட்டு வானதி சீனிவாசனை மாநில தலைவராக்கி அதிமுகவினரை திருப்திப்படுத்த நினைக்கிறது பாஜக தலைமை என்றும் சிலர் ஆருடம் சொல்கிறார்கள். ஆனால், இவை அனைத்தையுமே அப்பட்டமாக மறுக்கிறது அண்ணாமலை தரப்பு.

வானதி சீனிவாசன்

இது தொடர்பாக பாஜக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “மற்ற கட்சிகளை தங்கள் வழிக்குக் கொண்டுவர பாஜக தலைமை எப்படி வேண்டுமானாலும் காய் நகர்த்தும். ஆனால், தங்கள் கட்சி விவகாரத்தில் இன்னொரு கட்சி தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்காது. அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தலைவர்கள் தரும் அழுத்தத்தையும் அப்படித்தான் பார்க்கிறது தலைமை.

தமிழகத்தில் அண்ணாமலையை வைத்து பரப்பப்படும் செய்திகளுக்கும் டெல்லி பாஜக தலைமையின் நகர்வுகளுக்கும் தலைகீழான வித்தியாசம் இருக்கிறது. அண்ணாமலையை மாற்றும் யோசனையே பாஜக தலைமையிடம் இல்லை. சரியோ தவறோ, அண்ணாமலையின் செயல்பாடுகளால் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. இதுவரை பாஜக ரேடாரில் சிக்காமல் இருந்த தமிழ்நாட்டிலும் இப்போது பாஜகவின் கொடி பறக்கிறது. அதற்கு அண்ணாமலையும் ஒரு காரணம். அப்படி இருக்கையில் அவரை எப்படி மாற்றுவார்கள்?

பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றாக்கி அல்லது ஓரணிக்குள் கொண்டு வந்து தேர்தலைச் சந்தித்தால் தான் திமுக கூட்டணியின் பலத்துக்கு ஈடுகொடுக்க முடியும் என்பது பாஜக தலைமை அதிமுகவுக்கு தந்த யோசனை. ஆனால், தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை தங்கள் அணிக்குள் கொண்டு வருவதை எடப்பாடி தரப்பு விரும்பவில்லை. பிரச்சினைக்குக் காரணமே அதுதான்.

கட்சித் தலைமை விவகாரத்தில் தங்களுக்கு இருந்த சிக்கல்கள் தீர்ந்துவிட்டதாக ஈபிஎஸ் நினைக்கிறார். பாஜகவை உதறித்தள்ள அதுவும் ஒரு காரணம். ஆனால், பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் கர்நாடகா பொதுத்தேர்தலிலும், ‘இந்தத் தேர்தலுக்கு மட்டும் நிபந்தனைக்கு உட்பட்டு அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்படுகிறது’ என தெளிவாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

அந்தத் தேர்தல்களில் ஓபிஎஸ் அணி போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டதும் ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் சிக்கலின்றி கிடைக்க இன்னொரு காரணம். ஆனால், மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ்ஸும் இரட்டை இலையைக் கேட்டு மல்லுக்கு நின்றால் நிச்சயம் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கிவிடும். இதை பாஜக தலைமை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். சின்னம் முடக்கப்பட்டால் ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கடி உண்டாகும்.

சின்னத்தை முடக்கி ஈபிஎஸ் தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டு, ஓபிஎஸ், தினகரன், சசிகலா உள்ளிட்ட அதிமுக தலைவர்களை ஓரணியில் திரட்டி அவர்களுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் பாஜக போட்டியிடும். ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதிதான். அதற்கு முன்னோட்டமாக நவம்பரில் ராமநாதபுரம் ராணியைச் சந்திக்க வருகிறார் பிரதமர் மோடி.

மோடி ராமநாதபுரத்தில் களமிறங்கினால் ஒட்டுமொத்த பாஜகவின் பார்வையும் பலனும் தமிழகத்தின் மீது திரும்பும். அப்படியான சூழல் அமையுமானால், பாஜக கூட்டணியில் இடம்பிடிக்கும், டிடிவி தினகரன், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், அன்புமணி ராமதாஸ், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைகளும் வெற்றிபெறுவார்கள். சூழலைப் பொறுத்து தென்சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றிமுகம் காணலாம். இது நடந்தாலே பாஜகவுக்கு பெரிய வெற்றிதானே?” என்றார்கள்.

ஓபிஎஸ்ஸை பாஜக உள்ளே இழுப்பதன் பின்னணியில் எதிர்காலத்தில் அண்ணாமலையை துணை முதல்வராக்கும் தொலைநோக்குத் திட்டமும் பாஜக தலைமை வசம் இருப்பதாக பாஜக தரப்பில் சொல்கிறார்கள். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர்கள், “பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீமிலிருந்து பிரிந்து வந்த சுனில் கனுகோலு தான் கடந்த தேர்தலில் ஈபிஎஸ் தரப்புக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணி செய்தார். ’வெற்றிநடை போடும் தமிழகமே’ முழக்கமெல்லாம் அவரது ஏற்பாடுதான். இப்போதும் ஈபிஎஸ் தரப்புக்கு வேலை செய்துவரும் சுனில், ராகுல் காந்திக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ கூட ராகுலுக்கு சுனில் போட்டுக்கொடுத்த ரூட் தான்.

இம்முறை மத்தியில் பாஜக ஆட்சி அமைக்காது. காங்கிரஸின் ‘கை’ தான் ஓங்கி இருக்கும் என்பது சுனில் டீமின் கணிப்பு. இதை அவர்கள் ஈபிஎஸ்ஸின் காதிலும் போட்டிருக்கிறார்கள். இதையும் கூட்டிக்கழித்துப் பார்த்துத்தான் பாஜகவைவிட்டு ஒதுங்கும் முடிவை எடுத்திருக்கிறார் ஈபிஎஸ். தங்கள் கூட்டணியில் பாஜக இல்லை என்றால் காங்கிரஸ் தங்களை நோக்கி வரலாம் என ஈபிஎஸ் நம்புகிறார். ஆனால், அவர் நினைப்பதை அத்தனை எளிதாக அடையவிடாது பாஜக தலைமை” என்றார்கள்.

தாங்கள் எதை நோக்கி நகர்கிறோம் என்பதை அதிமுக தெளிவுபடுத்திவிட்டது. ஆனால், தங்களது திட்டம் என்ன என்பதை சொல்லாமல் பூடகமாகவே வைத்திருக்கிறது பாஜக தலைமை. அவர்களும் அறிவித்துவிட்டால் தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடிக்கும்!

பெட்டிச் செய்தி: 1

மோடியை பிரதமராக வரவிட மாட்டோம் என பழனிசாமியால் சொல்லமுடியுமா? - இராம.ஸ்ரீனிவாசன்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்த பிறகும் இன்னும் அதிமுகவின் தயவை பாஜக எதிர்பார்த்து நிற்பது ஏன் என்ற கேள்வியுடன் பாஜக பொதுச்செயலாளர் இராம.ஸ்ரீனிவாசனிடம் பேசினோம்.

இராம.ஸ்ரீனிவாசன்

“மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை மோடி ஆதரவு வாக்குகள், மோடி எதிர்ப்பு வாக்குகள் - இந்த இரண்டு மட்டுமே பிரதானம். மோடி எதிர்ப்பு வாக்குகளை கொண்டுள்ள திமுக தனது கூட்டணியை வலுப்படுத்தி வைத்திருக்கிறது. அதிமுக வாக்கு வங்கியானது மோடிக்கு ஆதரவான வாக்கு வங்கி. அதிமுக ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மோடிதான் மீண்டும் பிரதமர்; அதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல், மோடியை பிரதமராக வரவிடமாட்டோம் என எடப்பாடி பழனிசாமியால் சொல்லவே முடியாது. அப்படி இருக்கையில் பாஜகவைவிட்டு அதிமுக விலகி நிற்பது அதிமுக, பாஜக கட்சிகளின் பொதுவான நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும்.

மாநில அளவில் எங்களுக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்சினைகள் தேசிய விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடாது என நாங்கள் நினைக்கிறோம். அதனால் தான் அதிமுக எங்கள் கூட்டணியில் தொடர வேண்டுமென நினைக்கிறோம். இருப்பினும் இது எங்களது கருத்து மட்டுமே, இறுதி முடிவை எடுக்க வேண்டியது பாஜக தலைமைதான்” என்றார் அவர்.

பெட்டிச் செய்தி : 2

யார் இல்லை என்றாலும் ஜெயிப்போம்! - அண்ணாமலை

கடந்த 5-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது மாஸ்க் அணிந்து வந்து கலந்துகொண்டார் அண்ணாமலை.

நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் அண்ணாமலை...

அது சமயம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும்; அது அவர்களது விருப்பம். இந்தக் கட்சி இருந்தால் தான் ஜெயிப்போம்... இந்தக் கட்சி இல்லை என்றால் ஜெயிக்க மாட்டோம் என்றெல்லாம் யாரும் கூறமுடியாது. யார் இல்லாவிட்டாலும் நாங்கள் ஜெயிப்போம். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் வந்து சேர்ந்த வரலாறும் இருக்கிறது” என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE