'இந்தி தெரிஞ்சவன் வாடா!’

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

திமுகவின் அதிகாரபூர்வ வலைத்தள பக்கங்களில் சமீபத்தில் வெளியான விளம்பரம் ஒன்று ஆச்சரியப்பட வைத்தது. ‘உடன்பிறப்புகளே விரைந்திடுங்கள்’ என்ற அழைப்புடன் வெளியான அந்த விளம்பரத்தில் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் மட்டுமின்றி இந்தியில் கட்டுரை எழுதத் தெரிந்தவர்களுக்கு திமுகவின் ஐ.டி. விங்கில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு அக்டோபர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க அதற்கான லிங்க்கும் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் திமுகவின் உறுப்பினர் அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும் என்றும் அதில் எக்ஸ்ட்ரா டிப்ஸ்களும் இருந்தன.

அமைச்சர் உதயநிதியின் சனாதனம் தொடர்பான பேச்சு வட மாநிலங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா போன்ற கட்சிகளும் உதயநிதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரசும் கொஞ்சம் நழுவியது. இந்தக் குழப்பத்தை பாஜக மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.

இதனால், நிலைமையை சீர்செய்யும் முயற்சியாக இந்தி தெரிந்தவர்களுக்கும் திமுக ஐ.டி. விங் வேலைக்கு அழைப்பு விடுத்துள்ளது. திமுகவின் நிலைப்பாட்டை இந்தியில் எடுத்துச் சொல்லவும் அதன் தலைவர்கள் பேசும் பேச்சுக்களை இந்தியில் மொழிபெயர்த்து வட மாநிலங்களில் சமூக ஊடகங்களில் பரப்பும் முயற்சியாகவும் இது கருதப்படுகிறது. இந்தியை தீவிரமாக எதிர்க்கும் திமுக, வட மாநிலங்களில் தங்கள் கருத்தைச் சொல்வதற்கு இந்தி மொழியின் முக்கியத்துவத்தை கொஞ்சம் லேட்டாக உணர்ந்திருப்பதாகவும் சிலர் கருத்துச் சொன்னார்கள்.

இதுஒருபுறம் இருக்க, கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசின் இந்தி திணிப்பைக் கண்டிப்பதாகக் கூறி ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகத்தை சமூக ஊடகத்தில் திமுக ட்ரெண்டாக்கியது. இந்த வாசகத்தைக் கொண்ட டி-ஷர்ட்களையும் திமுகவினர் பரவலாக அணிந்து கொண்டனர். இப்போது இந்தி தெரிந்தவர்களை வேலைக்கு அழைக்கும் திமுக ஐ.டி. விங் குறித்து ‘இன்று போய் நாளை வா’ படத்தில் வரும் காமெடியை குறிப்பிட்டு நெட்டிசன்கள் இப்படி கலாய்க்கின்றனர்...

‘உங்களுக்கு வேண்டாமென்றால், ‘இந்தி தெரியாது போடா’, தேவைப்படும்போது, ‘இந்தி தெரிஞ்சவன் வாடா’வா? திமுகவினரை இந்தி படிக்காமல் செய்துவிட்டு இப்போது இந்தி தெரிந்தவர்கள் வேலைக்கு வேண்டும்... அதுவும் திமுக உறுப்பினர் அட்டையுடன் வரவேண்டும் என்றால் அவர்கள் என்னப்பா செய்வார்கள்?

... ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா!’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE