திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையும் இணைந்து சோதனை நடத்தி வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நேற்று முன் தினம் (அக்டோபர் 5) முதல் சோதனை நடைபெற்று வருகிறது. ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், சாராய ஆலைகள், கல்வி நிறுவனங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினமும் மூன்று ஷிஃப்ட் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மாறிமாறி சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா, வரி ஏய்ப்பு செய்துள்ளாரா என்று சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
நேற்றைய தினம் பணம் எண்ணும் மிஷினையும் அதிகாரிகள் அவரது வீட்டுக்குள் எடுத்துச் சென்றனர். எனவே பணமும் பெரியளவில் கைப்பற்றப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகன் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.
இந்நிலையில் இன்று மாலை மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகன் வீட்டுக்கு வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவும், கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ஜூன் 13ம் தேதி சோதனை நடத்தியது அதன் தொடர்ச்சியாகவே அவர் கைது செய்யப்பட்டார்.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதமசிகாமனி தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன் பின்னர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஜெகத்ரட்சகன் வீட்டில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் அவரிடமும் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!