திருவாரூர்: அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில், நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணன் என்பவரது மகன் சக்தி (21) என்கிற மாணவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் அந்த மாணவர் தனது அறையில் இருந்து தூங்கி விழித்து வெளியில் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சக மாணவர்கள், அறையைத் திறந்து பார்த்தபோது, அவர் தனது படுக்கையிலேயே மயங்கி கிடந்தார். அவரது உடலை பரிசோதித்த போது அவர் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது. இது குறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்விடத்துக்கு வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், மாணவர் சக்தி இரவு நல்ல நிலையில் படித்துக் கொண்டிருந்தார் எனவும், அவருக்கு வேறு ஏதும் பிரச்சினைகள் இருப்பதாக தெரியவில்லை எனவும் சக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெளிவாக தெரியவரும் எனவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
» எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
» இலங்கை கடற்கொள்ளையர் தாக்கியதில் வேதாரண்யம் மீனவர்கள் காயம்
இதனிடையே, சீர்காழியிலிருந்த மாணவர் சக்தியின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். தனது மகனின் உயிரிழப்பு கண்டு பெற்றோர்கள் கதறி அழுத நிகழ்வு மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.