நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வானம் பார்த்த பூமியாய் காட்சியளித்த ஏரிகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கோடை வெயிலின் தாக்கமும் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. நாமக்கல் பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இருந்த பழைய கட்டிடம் ஒன்று நேற்று பெய்த கனமழைக்கு தானாக இடிந்து விழுந்தது. எனினும், அங்கு யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் இல்லை.
அதேசமயம் ராசிபுரம் அருகே அணைப்பாளையம், பாச்சல், நொச்சிப்பட்டி ஆகிய இடங்களில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து பொக்லைன் மூலம் வாய்க்கால் வெட்டப்பட்டு மழைநீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட இடங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் மிக அதிமான மழை பதிவாகியுள்ளது. அதில் அணைபாளையம் கிராமம் தாழ்வான பகுதியாக உள்ளதால் மழைநீர் தேங்கியது.
» மீஞ்சூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
» ‘ஏஏஐ’, ‘ஐடி’ அமைச்சக அதிகாரிகளிடம் கோவை தொழில் துறையினர் முன்வைத்த கோரிக்கை
தகவல் கிடைத்தவுடன் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் உடனடியாக 3 பொக்லைன்களைக் கொண்டு மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் 12 வீடுகள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகள் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் உடனடியாக பிளீசிங் பவுடர் போட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இரவு முதல் இப்பகுதி மக்கள் அங்குள்ள கோயில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், உணவு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இப்பகுதி மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளது. நெடுஞ்சாலை பகுதிகளில் நீர் வெளியேறும் கால்வாய்கள் அடைபட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே மாதத்தில் இதுவரை 5 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தபட்டுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் இல்லை. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் டெங்கு பரவாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.