விம்கோநகர் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ தடத்தில் தொழில்நுட்ப கோளாறு: ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி

By KU BUREAU

சென்னை: விம்கோநகர் - விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில், விம்கோநகர் - வண்ணாரப்பேட்டை இடையே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் வரை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னையில் விம்கோநகர் - விமானநிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், விம்கோநகர் - விமான நிலையம் வழித்தடத்தில், விம்கோநகர் - வண்ணாரப்பேட்டை இடையே நேற்று காலை சுமார் 10 மணி அளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தடைப்பட்டது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில், அங்கு அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து வந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி கோளாறை சரிசெய்தனர். தொடர்ந்து, இந்தவழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை சீரானது.

இதையடுத்து, விமான நிலையம் - விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்க தொடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் சேவை தடைப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

அதேநேரம், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நேரத்தில், விம்கோ நகர் பணிமனை - டோல்கேட், விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய வழித்தடங்களில் எந்தவித இடையூறும் இன்றி வழக்கம்போல மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கின.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE