ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள்: அரசு துறை தலைவர்களுக்கு மனிதவள மேலாண்மைத் துறை கடிதம்

By KU BUREAU

சென்னை: ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளில் காலதாமதம், ஊதிய உயர்வு தொடர்பாக சர்ச்சைகள் எழுவதால் தவறுகளை தவிர்க்க வேண்டும் என்று அரசுத்துறை தலைவர்களுக்கு மனிதவள மேலாண்மைத்துறை செயலர் நந்தகுமார் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் அனைத்து துறைகளின் செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசின் பல்வேறு நிலைகளில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள், ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளை கையாள்வதில் சில தவறுகள் செய்வதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதில் குறிப்பாக, ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளை முடித்துவைப்பதில் தாமதம், ஒழுங்கு நடவடிக்கையின் படியான தண்டனைகளை அமல்படுத்தாதது, மேல்முறையீட்டு வழக்குகளில் அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சி கோரும் முக்கியமான ஆவணங்களை தயாரித்து தராமல் இருப்பது போன்றவை முக்கிய மான தவறுகளாகக் கண்டறியப் பட்டுள்ளன.

இந்த தவறுகளை தவிர்க்கும் வகையில், அரசு ஆய்வு செய்து, ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மீண்டும் வலியுறுத்துகிறது.

அதன்படி, துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளின் மீதான நடவடிக்கையின்போது, வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை பின்பற்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும். விளக்கம் கோரும் வகையில் வழங்கப்படும் 17ஏ மற்றும் குற்றச்சாட்டு தொடர்பான 17பி சார்ஜ் ஆகியவற்றுக்குபதிலளிக்க 15 நாட்கள், விளக்கத்தை பெற்று ஆவணங்களுடன் அறிக்கை அளிக்க 30 நாட்கள்,விசாரணை அதிகாரி நியமனத்துக்கு 7 நாட்கள், விசாரணையை முடித்து, அறிக்கை அளிக்க 30 நாட்கள், அறிக்கையை ஆய்வு செய்துஒழுங்கு நடவடிக்கை அதிகாரி முடிவெடுக்க 10 நாட்கள், நடவடிக்கை தொடர்பாக கூடுதல் தகவல்களை பெறுவதற்கு 15 நாட்கள், டிஎன்பிஎஸ்சியின் கருத்தைப் பெற 30 நாட்கள், இறுதி உத்தரவு அரசுத்துறை அளவில் என்றால் 30 நாட்கள், அரசு தவிர்த்த பிற துறை என்றால் 7 நாட்கள் என காலஅவகாசம் நிர்ணயிக்கப்பட்டடுள்ளது.

இதன்படி 17ஏ குற்றச்சாட்டு என்றால் 85 நாட்களுக்குள்ளும், 17பி குற்றச்சாட்டு என்றால் 167 நாட்களுக்குள்ளும் முடிக்க வேண்டும். மேல்முறையீடு மற்றும் மறு ஆய்வு என்றால் 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும். ஊழல் தடுப்பு கண்காணிப்புக்குழு விசாரணை அல்லது தீர்ப்பாய விசாரணை என்றால் ஓராண்டுக்குள் முடித்து, அடுத்த 4 மாதங்களுக்குள் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

மேலும் ஏற்கெனவே ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, அனைத்து துறைகளின் செயலாளர்களும், ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளில், டிஎன்பிஎஸ்சியுடன் இணைந்து, தேவையான ஆவணங்களை தயாரித்து அறிக்கைக்கு முழு வடிவம்அளிக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள், தண்டனை விதிக்கும்போது, பணியாளரின் ஊதிய உயர்வு தொடர்பான விஷயத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்.இதில் எவ்வித தவறும் நேரக் கூடாது. தலைமைச்செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளின்தலைவர்களும், இதுதொடர்பாக,தங்கள் கீழ் பணியாற்றும் ஒழுங்கு நடவடிக்கை அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE