பொள்ளாச்சியில் இந்த ஆண்டுக்கான பலூன் திருவிழா ஜனவரி 12 ம் தேதி தொடங்கி 16 ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பலூன் பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிலும் குறிப்பாக பொள்ளாச்சியில் பலூன் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக நடத்தப்படும் சர்வதேச பலூன் திருவிழாவைக் காண்பதற்கு ஏராளமான பார்வையாளர்கள் இங்கு திரள்வார்கள். வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்யலாம்.
மேலும் பொள்ளாச்சியின் அழகை வானில் பறந்து கொண்டே கண்டுகளிக்கலாம். இதனிடையே இந்த வருடம் பலூன் திருவிழா எப்போது நடைபெறும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் வருகிற 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெற இருக்கிறது.
இந்த சர்வதேச பலூன் திருவிழாவில் நெதர்லாந்து, அமெரிக்கா, பிரேசில், கனடா உட்பட 8 நாடுகளில் இருந்து 10 வெப்ப பலூன்கள் வரவழைக்கப்பட்டு அவை பறக்கவிடப்பட உள்ளன. 60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூன்களில் வெப்பக்காற்று நிரப்பப்பட்டு மிக்கி மவுஸ், டைனோசர் உட்பட பல்வேறு வடிவங்களில் பலூன்கள் பறக்க விடப்படும். பலூனில் பறக்க விரும்புபவர்கள் தாங்கள் விரும்பும் பலூனை தேர்ந்தெடுத்து பறக்கலாம்.
இவை தரையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் முதல் 10 கிலோமீட்டர் உயரம் வரை பறக்கும். ஒரு பலூனில் மூன்று பேர் வரை பறக்கலாம். இதில் பறக்க ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அப்புறம் என்ன? பறக்க விரும்புகிறவர்கள் பொள்ளாச்சிக்கு டிக்கெட்டை புக் பண்ணுங்கப்பா.