“பழநி கோயிலுக்கு சென்று நெற்றியில் விபூதி வைத்துக்கொள்வாரா முதல்வர் ஸ்டாலின்?” - ஹெச்.ராஜா

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநியில் நடக்க உள்ள முருகன் மாநாட்டுக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலைக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வாரா? நெற்றியில் விபூதி வைப்பாரா? அதை செய்த பிறகே மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாவது: “வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை முஸ்லிம் அமைப்புகள் வரவேற்றுள்ளன. இந்த மசோதா நிறைவேற்றப்படும் போது பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான மக்கள் பயனடைவார்கள். இஸ்ரேல், ஹமாஸ் தொடர்பான பிரச்சினையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுகவினர் வங்கதேசத்தில் நடைபெறும் கலவரத்தில் இந்துக்கள் மீதும் அவர்களது வணிக நிறுவனங்கள், வீடுகள், கோயில்கள் மீதும் நடத்தப்படும் கொடூர தாக்குதல்கள் குறித்து கருத்தோ, கண்டனமோ தெரிவிக்கவில்லையே, ஏன்?

இந்துக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே இந்த கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும். இந்து கடவுள்களை பற்றி இழிவாக பேசி வரும் பேச்சாளர் சுகி சிவத்தை, முருகன் மாநாட்டு ஒருங்கிணைப்பு குழுவில் இருந்து நீக்க வேண்டும்.

பழநியில் ஆக.24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தால், முதலில் அவர் பழநி மலைக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். நெற்றியில் விபூதி வைத்துக் கொண்ட பிறகே மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அவர் மாநாட்டுக்கு வரக் கூடாது. இந்து மதம் சுயம்புவாக உருவான மதம். முருகன் இந்து கடவுள். தமிழ்க்கடவுள் முருகன் எனக் கூறி இந்துக்களை மொழி ரீதியாக பிளவுப்படுத்த திமுக திட்டமிடுகிறது. தற்போது திமுகவின் கோட்டை சிதைந்து வருகிறது. தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. திமுகவில் போதைப் பொருள் அணி என்று ஒரு பிரிவை உருாக்கலாம்.

பழநி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோசாலையில் பக்தர்கள் தானமாக வழங்கிய மாடுகள் இறைச்சிக்காக அனுப்பப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பதற்கு பி.கே.சேகர்பாபுவுக்கு தகுதி இல்லை. இந்து கோயில்களை அழிக்கும் துறையாக அறநிலையத்துறை இருக்கிறது” இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.

தொடர்ந்து, பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டியில் பாஜக சார்பில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE