உதகை: “டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வரை குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்” என உதகையில் நடைபெற்ற தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநில செயற்குழு கூட்டம் உதகையில் நடந்தது. கூட்டத்திற்கு, முன்னாள் எம்எல்ஏ-வான பெரியசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் தனசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில், பணி நிரந்தரம் செய்யும் வரை குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தை முழுமையாக உடனடியாக அமல்படுத்திட வேண்டும்.
பணி புரிந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.15 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் வயது அரசு ஊழியர்களுக்கு இணையாக 60 ஆக உயர்த்திட வேண்டும். பணியில் இருக்கும்போது இறந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு ஏதேனும் ஒரு அரசு துறையில் அல்லது டாஸ்மாக் நிறுவனத்தில் கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும். காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. பாட்டில் பெறும் போது மதுபான கடைகளில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது.
» ஜெர்மனி விமானப் படை அதிகாரிகள் நீலகிரி மலை ரயிலில் பயணம்
» வனவிலங்குகள் நுழைவதை தடுக்க அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு
எனவே, காலி மதுபாட்டில்களை மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனமே திரும்பப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது தமிழ்நாடு முழுக்க உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், மாநில பொருளாளர் கோவிந்தராஜ், மாநில நிர்வாகிகள் மாரி, மணிகண்டன், நெல்லை நெப்போலியன், இளங்கோவன், பாலசந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.