அய்யனார் கோயில் விழாவில் ஆதிதிராவிட சமூகத்தினரிடமும் தலைக்கட்டு வரி வசூலிக்க ஐகோர்ட்

By கி.மகாராஜன்

மதுரை: திருவுடையார்பட்டி அய்யனார் கோயில் அன்னதான விழாவில் ஆதிதிராவிட சமூகத்தினரிடம் தலைக்கட்டு வரி வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருவுடையார்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “சிவகங்கை மாவட்டம் திருவுடையார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ சுயம்பு சோலைசாத்த அய்யனார், வாழை சாத்த அய்யனார் கோயில்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அபிஷேகம், அங்கப் பிரதட்சணம் மற்றும் அன்னதான நிகழ்வுகள் நடைபெறும். இந்நிகழ்வில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வர். திருவிழாவுக்காக அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமும் தலைக்கட்டு வரி வசூலிக்கப்படும்.

ஆனால் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை. இதை எதிர்த்து கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தபோது, திருவிழா முடிந்துவிட்டதால் ஆதிதிராவிடர்கள் வரும் காலங்களில் அன்னதான நிகழ்வில் அனைவரும் பங்கேற்கவும், தலைக்கட்டு வரி வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ல் அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படவில்லை. இதற்கு அனுமதியும், பாதுகாப்பும் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஸ்ரீ சுயம்பு சோலைசாத்த அய்யனார், வாழை சாத்த அய்யனார் கோயில் தென்பகுதியில் நடைபெறும் அன்னதான நிகழ்வில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவும், போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி முகமது சபீக் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இ.மாரீஸ்குமார் வாதிட்டார். மாற்று சமூகத்தினர் சார்பில், ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரி பெறப்பட்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து அன்னதான நிகழ்வு நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரி பெறப்பட்டு, அன்னதான நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதை இந்துசமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE