நாடும் நமதே; நாற்பதும் நமதே... எடுத்த சபதம் முடிக்குமா திமுக?

By ராஜேஷ் மகாலிங்கம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் முன்னோட்டமாக புத்தாண்டு தினத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில், ‘நாடும் நமதே நாற்பதும் நமதே’ என தொண்டர்களை தட்டி எழுப்பி உட்கார வைத்திருக்கிறது திமுக தலைமை.

திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள்...

திமுகவை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளையும் தங்கள் தலைமையிலான அணி கைப்பற்றி விட வேண்டும் என்பதில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இருப்பினும், மகளிர் உரிமைத் தொகை வழங்கியதில் நடந்த குளறுபடிகள், வெள்ள நிவாரணம், மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு எதிராக எழுந்து அடங்கிய சர்ச்சைகள், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் போராட்ட அறிவிப்புகள் - இவையெல்லாம் திமுகவுக்கு பெரும் சவாலாக மாறி நிற்கின்றன.

அதனால், அனைத்திலும் தோற்றுப்போன திமுக அரசுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என எதிர்க்கட்சிகள் எதிர் முழக்கமிடுகின்றன. ஆனால், இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாத திமுக, ‘நாடும் நமதே நாற்பதும் நமதே’ என கருணாநிதி நினைவிடத்தில் புத்தாண்டு உறுதிமொழி எடுத்திருக்கிறது.

கோகுல இந்திரா

திமுகவின் இந்த சபதம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிடம் கேட்டதற்கு. “அது எப்படி சாத்தியமாகும்?” என சிரித்தபடி பேசத் தொடங்கினார். "நிச்சயமாக சாத்தியம் கிடையாது. ஏனென்றால் மக்கள் இந்த அரசு மீது அந்த அளவுக்கு அதிருப்தியில் உள்ளார்கள். மழை வெள்ளம் தொடங்கி மகளிர் உரிமைத் தொகை வரை எல்லாவற்றிலுமே மக்களை நம்ப வைத்து ஏமாற்றினார்கள்.

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையுமே உருப்படியாக நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்துப் போட்டு மதுவிலக்கை கொண்டு வருவோம், நீட் தேர்வை ரத்து செய்வோம் என அள்ளி வீசிய வாக்குறுதிகள் குறித்து தற்போது பேசுவதில்லை.

இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில், கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் தான் பிரதானமாக இருந்திருக்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை; மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதும் இல்லை. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அரிசி கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கும். அதுதான் தற்போதும் நடந்துகொண்டிருக்கிறது.

தூத்துக்குடி வெள்ளம்....

மழை வெள்ளத்தை முறையாக கையாண்டதாக திமுக சொல்கிறது. எனக்குத் தெரிந்து தாமிரபரணி ஆற்றில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டிருக்கிறார்கள். அதுதான் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கக் காரணம். அவர்களை இதை மறுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். இதை நான் சவாலாகவே சொல்கிறேன். தென் தமிழகம் தத்தளித்ததற்கு மழை காரணம் அல்ல... திமுகதான் காரணம்.

மக்களிடம் அவ்வளவு அதிருப்தி உள்ளது மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கொடுக்கப்படும் எனச் சொல்லிவிட்டு தற்பொழுது, தகுதியானவர்களுக்கு மட்டும் தான் என்பது எந்த வகையில் நியாயம். இதெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்கள் என இவர்கள் நினைக்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பதிலடி தருவார்கள். அதனால் 40 அல்ல... 4 தொகுதியில் கூட திமுக ஜெயிக்காது. தேவையில்லாமல் மனக்கோட்டை கட்ட வேண்டாம்” என்றார்.

தமிழரசி

கோகுல இந்திராவின் ஆவேச கருத்து குறித்து திமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ-வுமான தமிழரசியிடம் பேசினோம். “யார் சொல்வது...” என பதிலுக்கு ஆவேசமான அவர், ‘’இவர்களைப் போல மற்றவர்களுக்கு துரோகம் செய்து நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் முதல்வராக மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து செயல்படும் முதல்வராக எங்களது கழகத் தலைவர் இருக்கிறார்.

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இவர்கள் விட்டுச்சென்ற கடனை அடைப்பதற்கே எங்களது முதல்வருக்கு நேரம் சரியாக இருக்கிறது. தற்போது தான் அதையெல்லாம் சரி செய்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என நாங்கள் வாக்குறுதி கொடுக்க வில்லை. தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தான் சொன்னோம். அதைத்தான் தற்போது செயல்படுத்தி வருகிறோம்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் அடைந்தவர்கள்...

அப்படியும் விடுபட்டுப்போனவர்களிடம் மேல் முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு அவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதிகாரத்தில் இருந்த போது கொலை கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு திமுக ஆட்சி குறித்தோ எங்களது மக்களின் முதல்வர் குறித்தோ விமர்சிக்க எந்தத் தகுதியும் கிடையாது. இவர்களுக்காவது மத்திய அரசின் அனுசரணை இருந்தது. எங்களுக்கு அப்படி எந்த அனுசரணையும் இல்லை என்பது மக்களுக்குத் தெரியும்.

சென்னை போன்ற இடங்களில் எங்களது அரசு எடுத்த நடவடிக்கையால் தான் மழைவிட்ட மூன்றே நாளில் இயல்பு நிலை திரும்பியது. அதேநிலை தான் தூத்துக்குடி நெல்லையிலும். எங்கள் அமைச்சர் உதயநிதி, அக்கா கனிமொழி போன்றவர்கள் அங்கே களத்தில் நின்று எப்படியெல்லாம் பணியாற்றினார்கள் என்பது அந்த மாவட்ட மக்களுக்கு நன்கு தெரியும்.

இவர்களைப் போல எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் நாங்கள் செய்யவில்லை. எல்லாவற்றையும் முறையாக செய்தோம். அந்த நம்பிக்கையில் தான் ‘நாடும் நமதே நாற்பதும் நமதே’ எனச் சொல்கிறோம்’’ என்றார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு அணியும் பாஜக தலைமையில் ஒரு அணியும் தங்களுக்கு எதிராக களத்துக்கு வரும் என திடமாக நம்புகிறது திமுக. இவ்விரண்டு அணிகளுமே திமுக எதிர்ப்பு ஓட்டுகளைத்தான் பங்கிட்டுக்கொள்ளும் என்பதால் அதனால் தங்களுக்கு சாதகமே ஏற்படும் என்று கணக்குப் போடுகிறது திமுக. இந்தக் கணக்கை எல்லாம் வைத்தே, ‘நாடும் நமதே நாற்பதும் நமதே’ என சபதம் போட்டிருக்கிறது திமுக. எடுத்த சபதம் முடிக்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE