வனவிலங்குகள் நுழைவதை தடுக்க அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு

By டி.ஜி.ரகுபதி

மேட்டுப்பாளையம்: வனவிலங்குகள் நுழைவதை தடுக்க அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள தோலம்பாளையம் புதூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் கிரிஜா (55). கணவர் ரங்கசாமி உயிரிழந்த நிலையில், இரு மகன்களுடன் வசித்து வந்தார். கிரிஜா வெள்ளியங்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று (ஆக.8) வெள்ளியங்காட்டைச் சேர்ந்த நாகராஜ்(60) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், விவசாய கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இவர், இன்று ( ஆக.8) வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த விவசாய நிலத்தை சுற்றிலும் அமைக்கப் பட்டிருந்த இன்வெர்ட்டர் பேட்டரியில் இயங்கும் மின்வேலியில் கிரிஜாவின் கை தவறுதலாக பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் கிரிஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த காரமடை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அதில், நாகராஜ் தனது தோட்டத்தில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க, அனுமதியின்றி மின்வேலி அமைத்திருப்பதும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இருப்பதும், அந்த மின்வேலியில் சிக்கி கிரிஜா உயிரிழந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE