மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மாற்றுத் திறனாளியை அனுமதிக்க மறுத்த போலீஸாரை கண்டித்து ஆலய நுழைவு போராட்டம்

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் செயற்கை காலை கழற்றச் சொல்லிய போலீஸார், கோயில் நிர்வாகத்தை கண்டித்து மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்றது.

இதில் ஊர்வலமாக சென்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதுரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆக.6ல் நடந்த கருத்தரங்கிற்கு வந்த மாற்றுத்திறனாளி தமிழ்ச் செல்வி, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். அங்கிருந்த போலீஸார் அவரது செயற்கைக் காலை கழற்ற சொல்லியுள்ளார், மேலும் சக்கர நாற்காலியுடன் செல்ல ரூ.500 லஞ்சமாக கோயில் ஊழியர்கள் கேட்டதாக சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்து மாநகர காவல்துறை விளக்கம் வெளியிட்டது.

இந்நிலையில், மதுரை ஜான்சி ராணி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் அச்சங்கத்தின் மாநகர் மாவட்டத் தலைவர் பி.வீரமணி தலைமை வகித்தார். புறநகர் மாவட்டத் தலைவர் கே.தவமணி முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ஆ.பாலமுருகன் துவக்கி வைத்தார். மாவட்ட இணைச் செயலாளர் டி.குமரவேல் நிறைவு செய்து பேசினார். கரூர் மாவட்ட செயலாளர் கரூரான் கோரிக்கையை விளக்கி பேசினார்.

இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டேவிட், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியும், மாநிலக்குழு உறுப்பினருமான தமிழ்ச்செல்வி, புறநகர் மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.பாண்டி, மாவட்ட பொருளாளர் எல்.தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து தெற்கு கோபுரம் வழியாக ஆலய நுழைவு போராட்டத்திற்காக ஊர்வலமாக தங்களது வாகனங்களில் சென்ற மாற்றுத் திறனாளிகளை போலீஸார் தடுத்தனர்.

மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்றது.

இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸாரும், கோயில் அலுவலர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். செயற்கை காலை அகற்றச் சொன்ன போலீஸாரை பணியிட மாறுதல் செய்வதாக உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பின்னர், மாற்றுத் திறனாளிகளை செயற்கை கால்களுடன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்று சமரசம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE