நாய்களுக்கு கருத்தடை செய்ததாக கணக்கு காட்டும் உள்ளாட்சிகள்: நீதிபதிகள் ஆதங்கம்

By கி.மகாராஜன்

மதுரை: தெருநாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் உள்ளாட்சி நிர்வாகத்தினர் நாய்களுக்கு காதில் ஓட்டைபோட்டுவிட்டு கருத்தடை செய்ததாக கணக்குக் காட்டுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ஆதங்கம் கூறியுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் தெரு நாய் கடிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தக்கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்தவும், நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை முறையாக மேற்கொள்ளவும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களி்ல் ரேபிஸ் தடுப்பூசிகள் போதுமான அளவில் இருப்பில் இருப்பதை உறுதி்ப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரி இருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு இன்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள்,"உயர்நீதிமன்ற வளாகத்திலேயே நாய்கள் சுற்றி திரிகின்றன. அதையே கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகம் முழுவதும் இதே நிலை தான் உள்ளது. உண்மை நிலை இப்படி இருக்க மற்றொருபுறம் விலங்குகள் பாதுகாவலர்கள் என்ற பெயரில் விலங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

உள்ளாட்சி அமைப்பினர் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல், காதில் ஓட்டை போட்டுவிட்டு கருத்தடை செய்யப்பட்டதாக கணக்கு காட்டுகின்றனர். இந்த மனு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை, பிராணிகள் நலத்துறை செயலாளர்கள் மற்றும் தமிழக அரசு சார்பில் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE