பழநியில் அனுமதி பெறாத 487 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் - நகராட்சி முடிவு

By ஆ.நல்லசிவன்

பழநி: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவையடுத்து, பழநியில் திட்ட அனுமதி இல்லாத மற்றும் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டுள்ள 487 கட்டிடங்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு, கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து 152 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில் விசாரணையின் போது, பழநி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 487 கட்டிடங்களை அகற்றுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடர்ந்து முறையாக மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவையடுத்து, பழநி சன்னிதி வீதி, அய்யம்புள்ளி சாலை, இடும்பன் இட்டேரி சாலை, அருள்ஜோதி வீதி, திருஆவினன்குடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி அலுவலர்கள் நடத்திய ஆய்வில் திட்ட அனுமதி பெறாத மற்றும் திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்ட வீடுகள், கடைகள் என மொத்தம் 487 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இதைத் தொடர்ந்து, அந்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "நோட்டீஸ் வழங்கிய 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள் உரிய வரைப் படத்துடன் கூடிய திட்ட அனுமதி, கட்டிடம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்பதற்கான ஆவணங்களை நகராட்சியில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE