பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் பாதிப்பு: 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

By சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், வேலூர், தருமபுரி மாவட்டங்களில் 400 இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.

இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். இதில், 90 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்கள்.

தொடர்ந்து உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலை, மின் கட்டணம் உயர்வு, லாரி வாடகை உயர்வு போன்றவற்றால், தீப்பெட்டி தயாரிப்பின் அடக்கச் செலவு அதிகரித்துள்ளது. இதனால், சுமார் 40 குச்சிகள் கொண்ட தீப்பெட்டியின் விலையை ரூ.1-ல் இருந்து ரூ.2 ஆக உயர்த்தி சிவகாசியில் நடந்த அனைத்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

கடும் சவால்: இந்த விலை உயர்வு 14 ஆண்டுகளுக்கு பின்னர் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும், தீப்பெட்டிகளை கொள்முதல் செய்யும் வடமாநில வியாபாரிகள் விலை உயர்வை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மீண்டும் பழைய விலைக்கே தீப்பெட்டி விற்பனை தொடர்கிறது. ஆனால், மூலப்பொருட்கள் விலை மற்றும் செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்கள், தீப்பெட்டி தொழிலுக்கு கூடுதல் சவாலாக மாறியுள்ளது. பிளாஸ்டிக் லைட்டர்கள் வரவால் தீப்பெட்டி தொழிலை சீராக கொண்டு செல்ல முடியாமல் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.

மாதந்தோறும் அதிகரிப்பு: இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறியதாவது: தீப்பெட்டிக்கு தேவையான மூலப்பொருட்கள் அட்டை, குச்சி, பேப்பர், மெழுகு, குளோரேட், சிவப்பு பாஸ்பரஸ் போன்றவற்றின் விலை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், தீப்பெட்டியின் அடக்கச் செலவுக்கு ஏற்ப, சந்தையில் விலை கிடைக்கவில்லை.

இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இந்தியாவின் அனைத்து நகரங்கள், கிராமங்களில் இந்த பிளாஸ்டிக் லைட்டர்கள் ரூ.8 முதல் ரூ.12 வரையிலான விலையில் கிடைக்கின்றன. ஒரு லைட்டர் 20 தீப்பெட்டி விற்பனையை பாதிக்கும்.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் மத்திய அரசை அணுகியபோது, ரூ.20-க்கு குறைவான பிளாஸ்டிக் லைட்டர்களை தடைசெய்து உத்தரவிடப்பட்டது. ஆனாலும், பிளாஸ்டிக் லைட்டர்கள் தங்குதடையின்றி கிடைக்கின்றன.

தடை விதிக்க வேண்டும் அந்தமான் - நிகோபார் யூனியன் பிரதேசத்தில் பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று இந்தியாவிலும் தடைவிதிக்க வேண்டும். தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2014-ல் பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதும் சிறு தொழில் பட்டியலில் இருந்து தீப்பெட்டி தயாரிப்பு நீக்கப்பட்டது. அதேபோல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தீப்பெட்டிக்கான ஊக்கத்தொகை 8 சதவீதத்தில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்போது அது 1.5 சதவீதமாக உள்ளது.

இதனை மீண்டும் 8 சதவீதமாக உயர்த்த வேண்டும். தீப்பெட்டி தயாரிப்பை மீண்டும் சிறுதொழில் பட்டியலில் இணைக்க வேண்டும். மின் கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். முத்ரா திட்டத்தில் வழங்கப்படும் ரூ.5 லட்சம் கடனை ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும். தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE