சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: வங்க தேசத்தில் தலைதூக்கிய இஸ்லாமிய அடிப்படை மதவாதஅமைப்புகள், அடிப்படை வாதத்தை ஏற்றுக் கொள்ளாத அந்நாட்டு பிரதமர் ஹசீனா பேகத்தை ஆட்சியில் இருந்து இறக்கி, தனது சொந்த நாட்டிலிருந்தே வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளன.
இதுவெறும் அரசியல் ரீதியானஆட்சி கவிழ்ப்பு அல்ல. வங்கதேசம் ஒரு அடிப்படை இஸ்லாமிய நாடாக இருக்க வேண்டும்என்ற சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாகவே ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய சிலநாடுகளின் கைங்கரியம் இல்லாமல் இந்த சம்பவம் நடைபெற வாய்ப்பு இல்லை.
50 ஆண்டுகளாக இந்தியாவின்கிழக்குப் பகுதியில் பெரிய அளவுக்கு எல்லைப் பிரச்சினை அல்லது நதிநீர்ப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவற்றைப் பேசித் தீர்க்கக்கூடிய சூழல் இருந்தது. அந்த சமநிலையை முற்றிலும் மாற்றிடும் நோக்கத்தோடு இந்த ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. இந்தியா நிச்சயம் இதில் கவனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இருந்தாலும் மேற்கில் அதிகமாகவும் வடக்கில் ஓரளவு போர்மேகம் சூழ்ந்திருந்த இந்திய எல்லையில் இப்போது கிழக்குப் பகுதியில் இருந்தும் போர் மேகங்கள் உருவாகி ஒரு அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. எனவே,வங்கதேச ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து நாம் எச்சரிக்கையாக இருப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.