கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

By KU BUREAU

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியாக சென்று, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் தலைவராகவும் இருந்தவர் கருணாநிதி. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார்.

அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கருணாநிதியின் நினைவு தினத்தில், திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டு, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, நேற்று காலை 8.10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓமந்தூரார் தோட்ட வளாகத்துக்கு வந்தார். அவருடன் துரைமுருகன், நேரு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள் வந்தனர். அங்குள்ள கருணாநிதி சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, 8.15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. இதில், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி, ராசா, தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் ஆர்.எஸ்.பாரதி, பூச்சி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு இடையில் ஊர்வலத்தில் இணைந்து கொண்டார்.

ஊர்வலம் செல்லும் வழிகளில் ஆங்காங்கே கருணாநிதியின் சாதனைகள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் முரசொலி தொடங்கியது முதல் போராட்டங்களில் பங்கேற்றது, திட்டங்கள் தொடர்பான வாசகங்கள், படங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இவற்றைப் பார்வையிட்டபடி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த கட்சியினர், பொதுமக்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி சென்றார்.

ஊர்வலம் 30 நிமிடங்களில், அண்ணா, கருணாநிதி நினைவிட வளாகத்தை எட்டியது. முதலில், அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின், கருணநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரைத் தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், நிர்வாகிகளும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அண்ணா அறிவாலயத்தில், கருணாநிதி சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

முன்னதாக, திருச்சி திருவெறும்பூரில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின், சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்தபடி, காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், மற்றும் கனிமொழி எம்.பி, திருச்சியில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அந்தந்த மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

‘உரமூட்டிக் கொண்டோம்!’ - முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-ம் நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றங்களை எல்லாம் பட்டியலிட்டு, அதன் வரலாற்றைச் சொன்னால் கருணாநிதியின் பெயர் உயர்ந்து நிற்கும், உயிரென நிற்கும்.

ஆறாத வடுவென, ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவர் நம்மை பிரிந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆறு. இந்நாளில் அண்ணனின் அருகில் அவர் ஓய்வு கொண்டிருக்கும் கடற்கரைக்கு உடன்பிறப்புகள் சென்று, ‘அவர் காட்டிய வழிதனில், அவர் கட்டிய படை பீடு நடைபோடும், தமிழும் தமிழகமும் அவனிதனில் உயர்ந்து விளங்கப் பாடுபடும்’ என உறுதியெடுத்து உரமூட்டிக் கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE