மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் கட்டாய கையெழுத்து: உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்

By KU BUREAU

மதுரை: மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களிடம் முன் ஓய்வு ஆவணங்களில் கட்டாயமாக கையெழுத்து பெறப்படுகிறது என்று உயர் நீதிமன்ற மதுரைஅமர்வில் புகார் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்தும், தமிழகஅரசே தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்றுவலியுறுத்தியும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் டான்டீ நிறுவனம் தரப்பில், "டான்டீ நிறுவனம் ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால், மாஞ்சோலை தேயிலைத்தோட்டத்தை ஏற்று நடத்த முடியாது" என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை டான்டீ நிறுவனத்திடம் ஒப்படைக்க முடியாது என்று வனத் துறையும் தெரிவித்தது. இதற்கிடையில், மாஞ்சோலை தேயிலைத்தோட்டத்தில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், இது தொடர்பான மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

வழக்கறிஞருக்கு அனுமதியில்லை: மனுதாரர்கள் தரப்பில், "மாஞ்சோலைப் பகுதி மக்களை சந்திக்கச் செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிப்பதில்லை. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி முன் ஓய்வு பெறும் ஆவணங்களில் கையெழுத்து பெறப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

பிபிடிசி நிறுவன வழக்கறிஞர் வாதிடும்போது, "மாஞ்சோலையில் 534 தொழிலாளர்கள் முன்கூட்டிய ஓய்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். முன் ஓய்வைஏற்பதும், ஏற்காததும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. ஏற்ெகனவே 25 சதவீத தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மீதிதொகை நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில், நாகர்கோவில் தொழிலாளர் நலத் துறை உதவிஇயக்குநரிடம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்று அனைத்துத் தரப்பினரும் ஆஜராகி, தங்கள் தரப்புவாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE