மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: பாசனத்துக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

By KU BUREAU

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையின் 16 கண்மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 22,200கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் கடந்த 8 நாட்களுக்குப் பிறகு 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டது.

அதேநேரத்தில், அணையின் நீர்மின் நிலையங்கள் வழியாக டெல்டா பாசனத்துக்கு நேற்று காலை 5 மணி முதல் விநாடிக்கு 21,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இது காலை 8 மணிக்கு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம்மாலை விநாடிக்கு 15 ஆயிரம்கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வேகமாக சரிந்து வருகிறது என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE