இன்று கோலாகலமாக தொடங்குகிறது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா!

By காமதேனு

13-வது ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க நிகழ்வு இன்று அகமதாபாத் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் நாளை முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். அதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

நாளை அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து உடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்நிலையில் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

இன்று மாலை 7 மணிக்கு தொடங்கும் பிரமாண்ட தொடக்க விழாவில் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் லேசர் ஷோ மற்றும் வாணவேடிக்கைகள் நடைபெறும். பாலிவுட் நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சி நடைபெற பெற உள்ளது.

நடிகர் ரன்வீர்சிங், தமன்னாவின் நடன நிகழ்ச்சி, ஆஷா போஸ்லே, ஸ்ரேயா கோஷல், அரிஜித் சிங், சங்கர் மகாதேவன் ஆகியோர் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். மேலும் 10 அணி கேப்டன்கள் அறிமுக நிகழ்ச்சியும் நடக்கிறது.

நாளைய போட்டிக்கு டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள் இன்றைய தொடக்க விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். உலகக் கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE