அத்திக்கடவு - அவினாசி திட்டம்: திமுக அரசு மீது எஸ்.பி.வேலுமணி சரமாரி தாக்கு

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், அக்கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இன்று (ஆக.7) நடந்தது. மாவட்ட செயலாளர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்து பேசினார். பின்னர் அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மக்களவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் எந்தெந்த பகுதியில் அதிமுகவுக்கு குறைவான வாக்குகள் பதிவாகியிருந்தது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எனவே அதிமுகவினர் வீடு வீடாக சென்று அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பழனிசாமியை முதல்வராக்க சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

60 ஆண்டுகால பிரச்சினையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தையும் நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் அந்த திட்ட பணிகள் முடிந்த பின்னரும், திமுக அரசு இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. தற்போது மழை நன்றாக பெய்ததால் நீர்நிலைகளில் 95 சதவீத தண்ணீர் இருப்பு இருக்கிறது. எனவே இத்திட்டத்தை பயன்பாட்டுக்கு திறந்து, இத்திட்டத்தின் கீழ் வறண்டு கிடக்கும் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.

வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரணமாக தற்போது 3 லாரிகளில் ரூ.20 லட்சம் பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளோம். திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் எந்த சாலையிலுமே பயணிக்க முடியவில்லை. குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. வீடு கட்ட விரைவான அனுமதிக்கு அனுமதி கட்டணத்தை இருமடங்காக உயர்த்திவிட்டனர். இதனால் கோவை மாவட்ட மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

திருப்பூரில் செயல்பட்டு வந்த ஏராளமான தொழிற்சாலைகள் வங்கதேசத்துக்கு சென்றன. தற்போது அங்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதால், அத்தொழிற்சாலைகளை மீண்டும் திருப்பூரில் தொடக்க மத்திய-மாநில அரசுகள் தேவையான கடன் வழங்க வேண்டும்" இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார். இக்கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE