மம்தாவிடம் பிச்சை கேட்கவில்லை... காங்கிரஸ் கடும் கோபம்!

By காமதேனு

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்களை மட்டுமே மம்தா பானர்ஜி ஒதுக்க முன்வந்துள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மம்தா பானர்ஜியை நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.

மம்தா பானர்ஜி

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்கிடையில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வெறும் இரண்டு மக்களவைத் தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவலை அடுத்து அங்கு திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் இடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி திரிணமூல் காங்கிரஸின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

``மம்தாவிடம் பிச்சை கேட்டது யார் என்று தெரியவில்லை. நாங்கள் பிச்சை கேட்கவும் இல்லை. பிச்சை எடுக்கவும் விரும்பமில்லை. கூட்டணி வேண்டும் என்று மம்தா தான் கூறி வருகிறார். மம்தாவின் கருணை எங்களுக்கு தேவையில்லை. காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மம்தா பானர்ஜி விரும்பவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கு சேவை செய்வதில் அவர் மும்முரமாக இருப்பதாகத் தெரிகிறது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடலாம்'' என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் 42 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் மால்டா சவுத் மற்றும் பெர்ஹாம்பூர் ஆகிய 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு 5.67 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அதனால் அந்த வாக்குகள் அடிப்படையில் வெறும் இரண்டு தொகுதிகளில் ஒதுக்க மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.

அதேபோல 2019 தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் 43 சதவீத வாக்குகளைப் பெற்று 22 இடங்களை வென்றது. அதனால் அந்தக் கட்சி தாங்கள் கொடுக்கும் தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE