வேலூர்: காவல்துறை அதிகாரிகளுக்கு வடக்கு மண்டல ஐஜி அஷ்ரா கர்க் எச்சரிக்கை

By வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல ஐஜி அஷ்ரா கர்க், ‘இதற்கு முன்பு எப்படி இருந்தீர்கள் என்று எனக்கு கவலை இல்லை. இனி எனக்கு எப்படி வேலை செய்ய வேண்டுமோ அப்படி வேலை செய்ய வேண்டும். எச்சரிக்கைக்கு பிறகும் தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள்’ என்று கூறியதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடக்கு மண்டல காவல்துறை தலைவராக சமீபத்தில் பதவியேற்ற ஐஜி அஷ்ரா கர்க், மாவட்ட வாரியாக அதிகாரிகளுடன் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இன்று (ஆக.7) நடைபெற்றது. ஐஜி அஷ்ரா கர்க் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன் மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது, "காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் மெத்தனமாக இருக்கக் கூடாது. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் விரைவில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். உங்கள் பணி களத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தானும் வழக்குப் பதிவு செய்திருக்கிறேன் என்று கணக்கிற்கு வேலை செய்யக்கூடாது. குறிப்பாக, சட்ட விரோத செயல்பாடுகளான காட்டன், லாட்டரி, கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை எதுவும் இல்லை என்ற நிலையை எட்ட வேண்டும். அடிதடி வழக்குகள், திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருட்டு வழக்குகளில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாது என்பதற்காக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்கக்கூடாது. ரவுடிகள் தொடர்பாக திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு அளிக்கும் தகவல்களை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டர் சட்ட நடவடிக்கை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இதற்கு முன் நீங்கள் எப்படி எல்லாம் வேலை செய்தீர்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. தனக்கு எப்படி பணி செய்ய வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும். எனக்கு எதுவும் தெரியாது என்று மட்டும் யாரும் நினைக்க வேண்டாம். மாவட்ட அளவில் எனது மேற்பார்வையில் ஒரு தனிப்படை செயல்படும்.

தங்கள் காவல் எல்லைக்குள் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்வதாக எனக்கு தகவல் தெரிந்தால், எனது தனிப் படையினர் நேரடியாக ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். அதன் பிறகு சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எச்சரிக்கை அளித்த பிறகும் தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள். காவல் துறையில் நமக்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்களோ அதை முறையாக செய்ய வேண்டும். மண்டல காவல் அலுவலகத்தில் இருந்து வரும் தகவல்கள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐஜி அஷ்ரா கர்க் எச்சரித்துள்ளார்" என அதிகாரிகள் கூறினர்.

முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல ஐஜி அஷ்ரா கர்க், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறை அதிகாரிகளுடன் இன்று (ஆக.7) ஆய்வு மேற்கொண்டார். இதில், காவல் அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என்ற அறிவுரையை நேரில் வழங்கிச் சென்றதாக காவல் அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE