மதுரை: நூறு நாள் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மேற்கு மற்றும் கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.மாயாண்டி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் வி.உமா மகேஸ்வரன் கோரிக்கையை விளக்கி பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா பேசினார். சங்க மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் நிறைவுரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் எம்.கலைச்செல்வன், மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன், சங்கத்தின் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பி.அழகர்சாமி, பொருளாளர் கார்த்திகைசாமி, மேற்கு ஒன்றியத் தலைவர் வி.பச்சையப்பன், செயலாளர் எஸ்.நாகராஜன், பொருளாளர் சி.முருகன், மாதர் சங்கக் மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.சரஸ்வதி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில், தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ கூலி ரூ.319 வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்றவாறு தினக்கூலியை ரூ.600ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வீடற்ற அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், வீடுகட்ட ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து நம்மிடம் பேசிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் சங்கர், "மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2024 - 25ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான நிதியை குறைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட 100 நாட்கள் வேலை திட்டத்தில் தமிழகத்தில் 32 நாட்கள் மட்டுமே வேலை தரப்படுகிறது. அதிலும் சட்டபூர்வமான கூலியும் வழங்குவதில்லை. எங்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்தக்கட்டமாக மாநில அளவில் போராட்டம் நடத்துவோம்" என்று சங்கர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE