சென்னை: எல்லா வகையிலும் நீங்கள் ஓர் உண்மையான சாம்பியன் வினேஷ் போகத். உங்களின் வலிமை, போராட்டம் மற்றும் இறுதிப் போட்டிக்கான உங்களின் குறிப்பிடத்தகுந்த பயணம் ஆகியவை மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'எல்லா வகையிலும் நீங்கள் ஓர் உண்மையான சாம்பியன் வினேஷ். உங்களின் வலிமை, போராட்டம் மற்றும் இறுதிப் போட்டிக்கான உங்களின் குறிப்பிடத்தகுந்த பயணம் ஆகியவை மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. ஒரு சில கிராம் காரணமாக நிகழ்த்தப்பட்ட தகுதி நீக்கம் உங்களின் உத்வேகத்தையும், சாதனைகளையும் குறைத்துவிடாது. நீங்கள் ஒரு பதக்கத்தை தவறவிட்டாலும், உங்களின் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள்' என தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வினேஷ் போகத், கியூபா வீராங்கனையைத் தோற்கடித்தார். மேலும், ஒலிம்பிக் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இன்று ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் வினேஷ் போட்டியிடுவதாக இருந்தது.
இதற்காக, இன்று காலை அவருக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் நிர்ணயிக்கப்பட்ட எடையான 50 கிலோவைத் தாண்டி 100 கிராம் அதிகமாக இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வினேஷ் போகத்தின் பதக்க வாய்ப்பு பறிபோனது. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.