விழுப்புரம்: மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் கடல் நீர் உட்புகாதவாறு கட்டப்பட்டு வரும் கழுவெளி ஏரி கடைமடை அணையை மாவட்ட ஆட்சியர் பழனி இன்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர்,"கந்தாடு கிராமத்தில் கடல் நீர் உட்புகாதவாறு தடுக்க ரூ.161 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 6.6 டி.எம்.சி நன்னீர் சேமிப்புத்திறன் கொண்ட கடைமடை அணை ஆய்வு செய்யப்பட்டது. இந்த அணை சுமார் 70 சதுர கிலோ மீட்டர் நீர்பரப்பு உள்ளது. இந்த ஏரி 8 கிலோ மீட்டர் நீள முகத்துவாரத்தின் மூலம் எடையன்திட்டு கழுவேலியில் இணைகிறது.
கழுவெளி ஏரியை மீட்டெடுத்து தண்ணீரை தேக்குதல், கடல்நீர் உட்புகுதலை தடுத்தல் மற்றும் கடல்நீரை உள்விடாமல் நன்னீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்தும் தடுப்பணை அமைத்தல், புதிய கரை அமைத்து மழைக் காலங்களில் வெள்ள நீரை சேமித்து நிலத்தடி நீரை மேம்படுத்துதல், ஏரியின் கொள்ளவை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஏரியை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களான ஊரணி, வண்டிப்பாளையம், ஆத்திக்குப்பம், அனுமந்தை, கந்தாடு, கொள்ளிமேடு, திருக்கனூர், எம்.புதுப்பாக்கம், நடுக்குப்பம், ஓமிப்பேர், சித்தனப்பாக்கம், நாணகல்மேடு, தேவனந்தல், காரட்டை, அடசல் உள்ளிட்ட 29 கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்படும். மேலும், விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கழுவேலி ஏரியை சுற்றியுள்ள 51 நீர் பிடிப்புப் பகுதிகள் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்" என்று ஆட்சியர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, நடுக்குப்பம் மதுரா வண்டிப்பாளையம் ஊராட்சியில் உள்ள கழுவெளி பறவைகள் சரணாலயத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பறவைகள் சரணாலயத்தில் வந்து செல்லும் பறவைகள் குறித்து கேட்டறிந்து தொலை நோக்கி உதவியுடன் தற்பொழுதுள்ள பறவைகளை பார்வையிட்டார்.
மேலும், கடந்த பருவமழையின் போது பாதிப்புக்குள்ளான முறுக்கேரி ஏரியை தூர்வாரவும், ஆலத்தூர் ஏரியில் கரைப் பகுதியினை உயர்த்தி அமைத்திடவும் கந்தாடு ஏரியில் கரை மறுசீரமைப்பு செய்து மதகை சீரமைத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வுகளின் போது திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.