சலூன் கடைக்காரரின் சொத்தை அபகரிக்கும் நோக்கில் மிரட்டும் மதுரை துணை மேயர்: போலீஸில் புகார்

By என்.சன்னாசி

மதுரை: சலூன் கடைக்காரின் சொத்துகளை அபரிக்கும் நோக்கில் மிரட்டும் மதுரை துணை மேயர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மருத்துவர் சங்க நிர்வாகிகள் மதுரை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவர் சங்க நிர்வாகிகள் செல்வம், குமார், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மதுரை நகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதனிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில்,"தங்களது சங்க உறுப்பினர் முருகானந்தம், ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் சலூன் கடை நடத்துகிறார். இவரது சொந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜனின் ஆதரவாளர்களான கோழி குமார், புரோக்கர் முத்து, வாய் கணேசன் ஆகியோர் பிரச்சினை செய்து, முருகானந்தத்தின் தாயார் வசந்தாவை அடித்து காயப்படுத்தினர்.

இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அவர்களுக்கு ஆதரவாக கடந்த 30ம் தேதி காலையில் துணை மேயர், அவரது தம்பி ராஜேந்திரன், குமார் உள்ளிட்டோர் வசந்தாவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, சாதியைச் சொல்லி திட்டியுள்ளனர். மேலும், கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். கல்லை தூக்கிப்போட்டும் வசந்தாவை தாக்க முயன்றுள்ளனர். அப்போது தனது பாதுகாவலரிடம் சுட்டுத் தள்ளுங்கள் என, துணை மேயர் மிரட்டியுள்ளார்.

இது குறித்து முருகானந்தம் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீஸார் புகாரை வாங்க மறுத்துள்ளனர். வேறு வழியின்றி உயிருக்குப் பயந்த வசந்தா 5ம் தேதி ஆட்சியரிடமும் புகார் கொடுத்தார். இதனால் கோபம் அடைந்த துணை மேயர், தனது ஆதரவாளரான முத்து என்பவரை தூண்டிவிட்டு வசந்தா வீட்டுக்கு முன்பு டூவீரை நிறுத்தி இடையூறு செய்துள்ளார். மேலும், வசந்தாவின் மகனை ஜெயிலில் அடைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில், ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் 6ம் தேதி முருகானந்தத்தின் வீட்டுக்கு வந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை பார்த்துச் சென்றனர். ஆனாலும் இதுவரை விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஓராண்டாகவே முருகானந்தம் மற்றும் அவரது தாயாருக்கு, துணை மேயரும் அவரது ஆதரவாளர்களும் பலவகையில் இடையூறு செய்கின்றனர்.

முருகானந்தத்தின் சொத்தை அபகரிக்கும் நோக்கில் இதுபோன்ற செயல்களைச் செய்கின்றனர். புகார் அளித்தும், ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, அதிகார துஷ்பியோகம் செய்யும் துணை மேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகானந்தம் மற்றும் அவரது தயாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE