பதவியில் இருப்பவர்கள் திமுக தொண்டர்களின் குறைகளை நிறைவேற்றுங்கள்: விழுப்புரம் திமுக பொருளாளர் கோரிக்கை

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: தெற்கு மாவட்ட சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று விழுப்புரத்தில் மாவட்டப் பொறுப்பாளர் கௌதம சிகாமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எம் எல்ஏ-க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்டப் பொருளாளரான முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ-வான புஷ்பராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய விக்கிரவாண்டி எம்எல்ஏ-வான அன்னியூர் சிவா,"திமுக தலைமை மாவட்டப் பொறுப்பாளர் என்று அறிவித்தாலும் அவர் மாவட்டச் செயலாளர் தான். அமைச்சர் பதவி வேண்டுமா மாவட்டச் செயலாளர் பதவி வேண்டுமா என கேட்டபோது ஒருவர் மாவட்டச் செயலாளர் தான் வேண்டும் என்றார். அண்மையில் நம்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கேட்டபோது அவர், அமைச்சர் பதவி தான் வேண்டுமென்று வாங்கிக்கொண்டார். அவர் யார் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. நாங்கள் கட்சிக்காக உழைத்தோம்.

எங்களுக்கான பதவி கிடைத்தது. யார், யார் கட்சிக்காக உழைக்கிறார்கள் என்பது மாவட்டச் செயலாளருக்குத் தெரியும். திருக்கோவிலூர் தொகுதியை அமைச்சர் பொன்முடி பார்த்துக்கொள்வார். விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வானூர் தொகுதியில் கடந்த எம்பி தேர்தலில் 96 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளோம். திண்ணைப் பிரச்சாரம் செய்து கட்சியை வளர்க்க வேண்டும். மாவட்டச் செயலாளர் நமக்கு கட்டளையிடுவார். அதே நேரம் நம்மை கண்காணித்து கொண்டிருப்பார்" என்று அன்னியூர் சிவா கூறினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட பொருளாளரான முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ் பேசுகையில், "மாவட்டச் செயலாளரும், அன்னியூர் சிவாவும் காலையில் பளபளப்பாக இருந்து மாலையில் சோர்ந்து போகிறார்கள் என்றனர். நாம் அப்படியே பளபளப்பாகவா இருந்தோம். யாருக்கு பதவி கிடைக்கிறது கிடைக்கவில்லை என்றெல்லாம் நாம் பார்க்கக் கூடாது. நம் தலைவரால் தான் நமக்கு மரியாதை. நாமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று தலைவர் பாடுபடுகிறார். 1996, 2006-ல் எனக்கு நகர்மன்றத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. எனது பதவிக்காலம் முடிந்துவிட்டது.

என்னைப் போலவே எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். முன்பெல்லாம் அமைச்சர் பொன்முடியை பார்க்க வேண்டும் என்றால் நான் உட்பட பலரைக் கடந்து செல்ல வேண்டும். இப்போது நிலைமை அப்படியல்ல. யார் வேண்டுமானாலும் மாவட்டச் செயலாளரை நேரடியாகச் சந்திக்கலாம். அந்தக் காலத்திலிருந்தே கிளைச்செயலாளர் பதவிக்கு நல்ல மரியாதை இருந்து வருகிறது. இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் நான்கு பேருமே கட்சிக்காரர்கள் என்ன உதவி கேட்கிறார்களோ அதைச் செய்து கொடுங்கள்.

பதவியில் இருப்பவர்கள் திமுக தொண்டர்களின் குறைகளை நிறைவேற்றுங்கள். இதைச் செய்தால் திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. என்னை தேடி வருபவர்களுக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்து வருகிறேன். எனக்கு பதவி கிடைக்காது என்று தெரியும். ஆனால் யாராவது கேட்டால், நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகச் சொல்வேன். கட்சிதான் நமக்கு மரியாதை. எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுக்க முடியாது. நமக்கு கௌரவம் என்பது நம் கட்சிதான்” என்று ஜனகராஜ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE