‘ஏஏஐ’, ‘ஐடி’ அமைச்சக அதிகாரிகளிடம் கோவை தொழில் துறையினர் முன்வைத்த கோரிக்கை

By இல.ராஜகோபால்

கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) கோவை கிளை நிர்வாகிகள் டெல்லியில் விமான நிலைய ஆணையகம் மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சக அதிகாரிகளை நேரில் சந்தித்து கோவை வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

சிஐஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற கோவை கிளை நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் டெல்லியில் இந்திய விமான நிலைய ஆணையகத்தின் (ஏஏஐ) தலைவர் சஞ்ஜீவ் குமார், செயலாளர் உம்லுன்மங் உவல்நம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து பேசினர். விமான நிலைய ஆணையகத்தின் அதிகாரிகளிடம் கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவையில் இருந்து துபாய் உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கும், உள்நாட்டு பிரிவில் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கும் விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கோவை விமான நிலைய வளாகத்தில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை ‘சரக்கக அலுவலகம்’ கொண்டுள்ள போதும், அதை கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தொழில்துறையினர் முழு அளவில் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. எனவே விமான சேவைகளை அதிகரித்து சரக்கக அலுவலகம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்ய உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள் கோவை விமான நிலைய வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். அதேபோல் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கிருஷ்ணனிடம் பேசும்போது, கோவை மாவட்டத்தில் மின்னணு துறையில் டெஸ்டிங், வெரிபிகேஷன் போன்ற பல்வேறு துறைகளில் வாய்ப்புக்களை வழங்க வலியுறுத்தப்பட்டது. இதுபோன்ற தொழில் நிறுவனங்களில் உயர்கல்வி முடித்த இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் கோவை கிளை முன்னாள் தலைவர் அர்ஜுன் பிரகாஷ், தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். டெல்லி பயணம் கோவை வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என தொழில் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE