சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி: 6 நாட்களுக்குப் பிறகு ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்

By KU BUREAU

தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று (ஆக.7) காலை வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி செல்லும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த மலைப்பாதையின் இருபுறமும் அழகிய இயற்கை காட்சிகள், வனவிலங்குகளும் தென்படுவதால் இந்த ரயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ய விரும்புகின்றனர். ஆனாலும், மழைக்காலங்களில் இந்த மலைரயில் ரத்தாவது வழக்கமாகி வருகிறது.

இதற்குக் காரணம், மழைக்காலங்களில் மலைகளிலுருந்து மண்சரிந்தும், கனமழையால் மரங்கள் விழுந்தும் தண்டாவளங்கள் சேதமடைகின்றன. இதனால் அவ்வப்போது ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் நீலகிரியில் பெய்த கனமழையால் ஹில்கிரோ – ஆர்டர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை இடையே இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவுற்றதால், இன்று முதல் மலைரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் நீலகிரி மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE