திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி தலைவர்பதவிக்கான தேர்தலில் திமுகவைச்சேர்ந்த மகாதேவன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலில் இளங்கோவன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திருமழிசை பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த வடிவேல்,துணைத் தலைவராக மகாதேவன் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி தலைவர் வடிவேல்,கடந்த மே மாதம் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இச்சூழலில், தமிழ்நாடு மாநிலதேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், நேற்று காலை திருமழிசை பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம், பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டம், பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் தனசெல்வன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. பூந்தமல்லி வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் மேற்பார்வையில், பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வெங்கடேசன் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தினார்.
» இந்தியா-ஜெர்மனி போர் பயிற்சி தொடக்கம்: பாதுகாப்பு பலப்படும் என விமானப்படை தலைமை தளபதி நம்பிக்கை
» தமிழக மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு என்ன செய்தது? - மாநிலங்களவையில் வைகோ கேள்வி
இந்த தேர்தலில், திமுக சார்பில் மகாதேவன் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அதிமுக தரப்பில் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்யப்படவில்லை. அதிமுக, பாஜகவைச் சேர்ந்த 6 கவுன்சிலர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். இதனால், 8 கவுன்சிலர்களின் ஆதரவுடன் போட்டியின்றி திமுக வேட்பாளர் மகாதேவன் பேரூராட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
புதிய பேரூராட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட மகாதேவனை, திமுகவின் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், ஆவடிஎம்எல்ஏவுமான சா.மு.நாசர்,பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாழ்த்தினர்.
காட்டாங்கொளத்தூரில்.. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவராகப் பதவி வகித்த வண்டலூர் வி.எஸ்.ஆராமுதன், கடந்த பிப்.29-ம் தேதி வண்டலூரில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வட்டார வளர்ச்சிஅலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் தலைமையில் நடைபெற்றது. தற்போது மொத்தமுள்ள 23 கவுன்சிலர்களில் 17 கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த ரத்தினமங்கலம் ஏ.வி.எம்.இளங்கோவன் என்கிற கார்த்திக் மனு தாக்கல் செய்தார்.
இவரை எதிர்த்து மற்ற கட்சியைச் சேர்ந்த யாரும் போட்டியிடாததால் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவராக ஏ.வி.எம்.இளங்கோவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஏ.வி.எம்.இளங்கோவனுக்கு திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.