திண்டுக்கல்: வயநாடு பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவிடும் வகையில், திண்டுக்கல் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் சேலை, கைலி, பெட்சீட், துண்டு, நைட்டி, குழந்தைகள் ஆடை, நாப்கின், பேஸ்ட், பிரஸ், குளியல் சோப், சலவைசோப், மாஸ்க், தேங்காய் எண்ணெய், பால் பவுடர், அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள், உலர் பழங்கள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி என 200 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருட்கள் லாரியில் அனுப்பிவைக்கப்பட்டது.
பொருட்கள் கொண்டுசெல்லும் லாரியை திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அவைத்தலைவர் காஜாமுகைதீன், செயலாளர் சையதுஅபுதாகீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மு.கோட்டைக்குமார், செ.முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
» கோவையில் தொடங்கியது இந்தியா - ஜெர்மனி கூட்டு போர் பயிற்சி 'தாரங் சக்தி' - என்ன ஸ்பெஷல்?