கோவை: கோவையில் மேற்கொள்ளப்படும் கூட்டு பயிற்சி இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும் என இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இடையே முதல் முறையாக கோவை சூலூர் விமானப்படை தளத்தில் 8 நாட்கள் கூட்டு போர் பயிற்சி இன்று (ஆக.6) தொடங்கியது. இந்தியா ஜெர்மனி இங்கிலாந்து ஸ்பெயின் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர், வீராங்கனைகள் அதிநவீன போர் விமானங்களுடன் பங்கேற்றுள்ளனர். இந்திய விமானப்படை சார்பில் தேஜஸ், சுகாய் உள்ளிட்ட பல அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்ற நாடுகளின் போர் விமானங்களுடன் போர் ஒத்திகை பயிற்சியில் கூட்டாக ஈடுபட உள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் இந்திய விமானப்படை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று (ஆக.6) போர் விமானத்தில் 5 மணி நேரம் பயணித்து கோவை வந்த ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸுக்கு, இந்திய வான் எல்லை பகுதியில் நுழைந்தது முதல் சூலூர் விமானப்படை தளம் வரும் வரை இருபுறங்களிலும் தேஜஸ் விமானங்கள் புடைசூழ வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி கூறும் போது, “இந்த போர் பயிற்சி இந்தியாவின் விமானப்படை பலத்தை எடுத்துக் காட்டவும் பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும் மிகவும் உதவும். இருநாட்டு விமானப்படையிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்து வருகின்றனர்” என்றார்.
ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் கூறும் போது, “இந்திய விமானப்படையுடன் இணைந்து 61 ஆண்டுகளுக்கு பின் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு மிகவும் உதவும். இதுபோன்ற பயிற்சி எந்த உலக நாடுகளுக்கும் எதிரானது அல்ல” என்றார்.
» கரூர் வழியாக தஞ்சை சென்ற ராணுவ வாகனங்கள் - மக்கள் வியப்பு
» “எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு தோல்வியை ஒப்புக் கொண்டது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மேலும், இங்கிலாந்து விமானப்படை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் சூலூர் விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கூட்டு போர் பயிற்சியில் 130 வீரர்கள், 6 அதிநவீன போர் விமானங்கள், வானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. விமானப்படை பிரிவில் இந்தியா, இங்கிலாந்து சிறப்பாக செயல்பட பயிற்சி உதவும்.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு பலப்படுத்த முக்கிய பங்கு வகிக்கும். பிரிட்டிஷ் தூதரக விமானப்படை ஆலோசகர் குரூப் கேப்டன் நெய்ல் ஜோன்ஸ் கூறும் போது, கோவை சூலூரில் நடைபெறும் போர் பயிற்சி இருநாடுகளுக்கும் இடையே உறவு மேம்பட உதவும். புதிய சவால்களை திறம்பட எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இப்பயிற்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி என்றார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.