கரூர் வழியாக தஞ்சை சென்ற ராணுவ வாகனங்கள் - மக்கள் வியப்பு

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் நகர் வழியாக இன்று (ஆக.6) காலை 11.45 மணியளவில் ராணுவ வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. இதனைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் அவற்றை வேடிக்கை பார்த்தனர்.

இது குறித்து விசாரித்தப்போது, வங்கதேசத்தில் கலவரம் வெடித்து அந்நாட்டு அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி இந்தியா வந்து தஞ்சமடைந்துள்ள நிலையில் இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதையொட்டி மேற்கு வங்க எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக ஹைதராபாத் ரெஜிமெண்ட்டை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் தஞ்சாவூர் ராணுவ தளத்திலிருந்து சரக்கு விமானங்கள் மூலம் வங்கதேச எல்லைக்கு செல்வதற்காக ராணுவ வாகனங்களில் கரூர் வழியாக சென்றனர்.

இவ்வாகனங்களில் அதிகாரிகள், வீரர்கள், மருத்துவ உபகரணங்கள், குடிநீர், படுக்கைகள் உள்ளிட்ட வீரர்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு சுமார் 50 வாகனங்கள் கரூர் வழியாக தஞ்சாவூர் நோக்கி திருச்சி சாலையில் சென்றனர். இவற்றை கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் புலியூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE