காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு துணை தலைவராக திமுகவின் இளங்கோவன் தேர்வு

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவராக திமுகவை சேர்ந்த இளங்கோவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவராக பதவி வகித்த வண்டலூர் வி.எஸ்.ஆராமுதன், கடந்த பிப்ரவரி 29-ம் தேதி வண்டலூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவி காலியானதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இன்று மாலை காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மறைமுக தேர்தல் செங்கல்பட்டு மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார் தலைமையில் நடைபெற்றது.

தற்போது மொத்தமுள்ள 23 கவுன்சிலர்களில் 17 கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஒன்றிக்குழு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக திமுகவை சேர்ந்த ரத்தினமங்கலம் ஏ.வி.எம். இளங்கோவன் என்கிற கார்த்திக் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து மற்ற கட்சியை சேர்ந்த யாரும் போட்டியிடாததால் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏ.வி.எம். இளங்கோவன் என்கிற கார்த்திக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதனையடுத்து ஒன்றியக்குழு துணை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏ.வி.எம். இளங்கோவனுக்கு திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE