“தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது” - எச்.ராஜா விமர்சனம்

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.

நீலகிரி தொகுதி முன்னாள் எம்பி மாஸ்டர் மாதன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி உதகையில் உள்ள ஒய்பிஏ அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எச்.ராஜா, அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து எச்.ராஜா நிருபர்களிடம் கூறியது: “2013-14 வரை பட்ஜெட்டின் மொத்த தொகையில் 7 சதவீதம் கூட மூலதன செலவினங்கள் கிடையாது. மூலதன செலவினங்கள் இல்லாவிட்டால் பொருளாதாரத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியாது. வேலைவாய்ப்புகள் உருவாகாது. ஆனால் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் ரூ.11,11,111 கோடியும், இதர மூலதனம் செலவுகள் சேர்த்து ரூ.15 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மூலதன செலவினத்துக்கு 7 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதைய பாரதிய ஜனதா ஆட்சியில் 30 சதவீதம் மூலதன செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல மாநிலங்கள் பலன்பெறும்.ஆனால் பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இல்லை என்று கூறி நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் புறக்கணித்துள்ளார். தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் தமிழக பட்ஜெட்டில் 27 மாவட்டங்களின் பெயர் இல்லை. அப்படி என்றால் அந்த 27 மாவட்டங்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று அர்த்தமா?

அரசியல் கத்துக்குட்டிகளான உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் தமிழகம் ஒரு ரூபாய் மத்திய அரசுக்கு வழியாக செலுத்தினால் 29 பைசா தான் திரும்ப கொடுக்கிறது என்று முழுப்பொய் கூறுகின்றனர். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் 50 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கிறது. மத்திய ஜிஎஸ்டி எவ்வாறு வசூலிக்க வேண்டும் என்பது குறித்து நிதி கமிஷன் வழிகாட்டுதலில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2013-14 வரை 32 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது 42 சதவீதம் நிதி பகிர்வு அளிக்கப்படுகிறது.மீதமுள்ள 58 சதவீத நிதியில் இருந்து தான் எல்லை பாதுகாப்பு, மாநிலங்களுக்குள் இருக்கும் நெடுஞ்சாலைகள் தகவல் தொடர்பு, நீதிமன்றம், ரயில்வே உள்ளிட்ட செலவுகளும் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் இந்த விஷயங்களை மறைத்து திமுக உள்ளிட்டோர் திரும்பத் திரும்ப பொய் சொல்கின்றனர். மாநில அரசுகளுக்கு நிதி பங்கீடு நிதிக்குழு மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும். பிரதமர் நிதி அமைச்சர் விருப்பப்படி தன்னிச்சையாக செய்ய முடியாது. ஆனால் இதுகுறித்து பேசாமல் நாடாளுமன்றத்தில் திமுகவினர் பொய்யை பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு குறித்து மக்களிடம் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டும் என்று தீய நோக்கத்துடன் செயல்படுகின்றனர் .

மத்திய அரசுக்கு நிதி கொடுக்கும் அதிகாரம் மட்டும்தான் உள்ளது. அதை செயல்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உள்ளது. இதன்படி விவசாயிகளுக்கு பிரதமர் நிதி உதவித் தொகை திட்டம் உள்பட பல திட்டங்களில் குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் படி விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்திலேயே பொய்யாக விவசாயிகளை சேர்த்து பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது தற்போது அந்த பணத்தை திருப்பி செலுத்த தேவையான நடவடிக்கையில் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. ஆனால் இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக சட்ட அமைச்சர், கவுண்டமணி காமெடியை போல் இதெல்லாம் அரசியலில் சாதாரணம் என்று கூறுகிறார். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 130 கொலைகள் நடந்துள்ளன. இதன்படி சராசரியாக ஒரு நாளைக்கு 4 கொலைகள் நடக்கவில்லை என்றால் தமிழக முதல்வருக்கும் சட்டத்துறை அமைச்சருக்கும் தூக்கம் போய்விடும்,” என்றார்.

தேர்தலுக்குப் பிறகு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறைந்துள்ளதா? என நிருபர்கள் கேட்டதற்கு, “எல்லா அரசியல் கட்சிகளிலும் தேர்தலுக்கு முன்பின் இவ்வாறு இருப்பது இயல்பானது தான். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 21 மாதங்கள் இருப்பதால், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் மாவட்டத்தில் 11-ம் தேதி நடக்கிறது. அந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்,” என்றார்.

அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, “கூட்டணி குறித்து முடிவு செய்வது, யாருக்கு எந்த தொகுதி ஒதுக்குவது என்ற அதிகாரம் பாஜகவின் நாடாளுமன்ற குழுவுக்கு தான் உள்ளது. பாஜக அகில இந்திய அளவில் உள்ள கட்சி என்பதால், இதுகுறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்கும், என்று அவர் கூறினார். இந்நிகழ்வின் போது அவருடன் மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உட்பட பலர் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE