துணை ஆணையர்களே இல்லாத மதுரை மாநகராட்சி: நிர்வாகப் பணிகள் பாதிக்கும் அபாயம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சியில் இரு துணை ஆணையர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்கள் இருவரில் ஒருவர் பணி ஒய்வு பெற்றுவிட்டார். மற்றொருவரும் இடமாறுதலில் சென்றுவிட்டதால் துணை ஆணையர்களே இல்லாத மாநகராட்சியாக மதுரை மாநகராட்சி செயல்படுகிறது. இதனால் நிர்வாகப் பணிகள், வரிவசூல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சியின் முதன்மை அதிகாரியாக ஆணையாளர் இருப்பார். அவருடைய நிர்வாகப் பணிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் அவருக்கு கீழ், இரண்டு துணை ஆணையர்கள் இருப்பார்கள். மதுரை மாநகராட்சியில், சரவணன், தயாநிதி ஆகியோர் துணை ஆணையர்களாக பணிபுரிந்து வந்தனர். கடந்த ஜூன் 30ம் தேதி தயாநிதி ஒய்வு பெற்றார். சரவணன், அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டு செங்கல்பட்டுக்கு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக சென்றுள்ளார். தயாநிதி, மாநகராட்சி வருவாய்ப் பணியை கவனித்து வந்தார்.

வருவாய்துறையில் உதவி ஆணையர் (வருவாய்) தலைமையில் 5 மண்டலங்களின் உதவி வருவாய் அலுவலர்கள், வருவாய் உதவியாளர்கள், பில் கலெக்டர்கள் ஆகியோர் மாநகராட்சி வரி வசூல் பணிகளை கவனிக்கிறார்கள். இவர்கள் பணியை துணை ஆணையர் தயாநிதி மேற்பார்வை செய்து வந்தார். வரி வசூல் குறையும் போது முடுக்கிவிடுவதும், வரி வசூல் செய்ய முடியாத இடங்களில் வரி வசூல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் பணியையும் தயாநிதி செய்து வந்தார். இது தொடர்பாக துணை ஆணையர் தயாநிதி, வருவாய்துறை அதிகாரிகள், ஊழியர்களை அழைத்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டங்களையும் நடத்துவார்.

இரு துணை ஆணையர்களும் தங்களுடைய அன்றாட பணிகளை தவிர, முக்கிய கோப்புகளை ஆய்வு செய்து கையெழுத்திட்டு ஆணையாளர் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்நிலையில் தற்போது துணை ஆணையர் தயாநிதி ஒய்வு பெற்ற பிறகு, அவருக்கு பதிலாக புதிய துணை ஆணையர் நியமிக்கப்படவில்லை. இடமாற்றம் செய்யப்பட்ட துணை ஆணையர் சரணவனுக்கு பதிலாகவும் புதிய துணை ஆணையர் நியமிக்கப்படவில்லை.

இரு துணை ஆணையர்களும் இல்லாமல் மாநகராட்சி வருவாய், பொது நிர்வாகம் போன்ற பணிகள் பாதிக்கத் தொடங்கி உள்ளது. இப்பணிகளை தற்போது ஆணையாளரே, மற்ற பணிச் சுமைகளுக்கு நடுவே பார்க்க வேண்டிய உள்ளது. நகராட்சி நிர்வாக இயக்குநர் நேரடி மேற்பார்வையில் இப்பணியிடங்களை நிரப்பும் முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை பணியிடங்கள் நிரப்பப்படாததால் துணை ஆணையர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேயர், உள்ளூர் அமைச்சர்கள் துணை ஆணையர் பணியிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி கூறியதாவது, "இரண்டு துணை ஆணையர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், மற்ற அதிகாரிகளை கொண்டு சிறப்பு கவனம் கொடுத்து பணிகள் பாதிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE