நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம்: முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் பங்கேற்பு

By ந. சரவணன்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணமடைந்த போலீஸாருக்கு 30 குண்டுகள் முழங்க இன்று (6ம் தேதி) நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் கடந்த 1981-ம் ஆண்டு நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து போலீஸ் ஜீப்பில் அழைத்துச் சென்றபோது சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடி குண்டை வெடிக்கச் செய்து தப்பி ஓடினார். இந்தச் சம்பவத்தில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர்கள் ஆதிகேசவலு, யேசுதாஸ், முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வீரமரணம் அடைந்த 4 போலீஸாருக்கு ஆண்டுதோறும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வீரமரணம் அடைந்த 4 போலீஸாருக்கு 42வது ஆண்டாக வீரவணக்க நாள் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். எஸ்பி-யான ஆல்பர்ட் ஜான் வரவேற்றார். தமிழக முன்னாள் டிஜிபி-யான வால்டர் தேவாரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதில், க்யூ பிரிவு எஸ்பி-யான ஷஷாங்க் சாய், முன்னாள் க்யூ பிரிவு எஸ்பி-யான அசோக்குமார், எம்எல்ஏ-க்கள் தேவராஜி, (ஜோலார்பேட்டை), நல்லதம்பி ( திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்), திருப்பத்தூர் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், திருப்பத்தூர் ஒன்றியக் குழு தலைவர் விஜயா மற்றும் அரசு அதிகாரிகள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், போலீஸார் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். அதையடுத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வால்டர் தேவாரம் பேசியதாவது: "பல ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூர், தருமபுரி ஆகிய பகுதிகளில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. மேலும், நக்சலைட்டுகள் ஆதிக்கம் இந்தியா முழுவதும் பரவி இருந்தது. தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்க நான் வேலுர் டிஐஜி-யாக நியமிக்கப்பட்டேன். அசோக்குமார் எஸ்பி உள்ளிட்டோர் இப்பகுயில் முகாமிட்டு நக்சலைட்டுகளை ஒழிக்க நக்சலைட்டுகள் ஆபரேஷன் தொடங்கினோம். இதற்கு இப்பகுதி மக்களும், தருமபுரி பகுதியைச் சேர்ந்தவர்களும் போலீஸாருடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினர்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக, தமிழகத்தில் ஒரு வருடத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்காக இப்பகுதி மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். தமிழகத்தில் தற்போது நக்சலைட்டுகள் இல்லை. ஆந்திரா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலங்கானா, பிஹார் போன்ற மாநிலங்களில் இன்றும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும். நாங்கள் எப்போதும் இதில் கலந்து கொள்வோம்"
என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் அனுசுயா டெய்சி கலந்து கொண்டு பேசுகையில் "அந்தக் குண்டு வெடிப்பில் நான் மயிரிழையில் உயிர் தப்பினேன். அப்போது தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருந்தது. நக்சலைட்டுகளை ஒழித்து தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றியவர் முன்னாள் டிஜிபி-யான தேவராம் தான். இன்று தமிழகத்தில் நக்லைட்கள் கிடையாது" என்றார்.

முடிவில், திருப்பத்தூர் டிஎஸ்பி-யான செந்தில் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE