கோவையில் இன்று மேயர் தேர்தல் : ரங்கநாயகி தேர்வாவாரா?

By KU BUREAU

நெல்லையைத் தொடர்ந்து கோவை மாநகராட்சியில் புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

நெல்லை மேயராக இருந்த பி.எம்.சரவணன் மற்றும் பாளையங்கோட்டை எம்எல்ஏ. அப்துல்வகாப் இடையே நிலவிய பனிப்போர் காரணமாக, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக செயல்பட்டனர். இதையடுத்து, கட்சித் தலைமை அறிவுறுத்தலின்பேரில் சரவணன் ராஜினாமா செய்தார். இதையொட்டி, திமுக கவுன்சிலர் பவுல்ராஜ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். திமுக கோஷ்டி பூசலுக்கு முடிவுகட்டும் வகையில், புதிய மேயரை தேர்வு செய்ய அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் முகாமிட்டு, திமுக கவுன்சிலர்களை அழைத்து சமரசம் பேசினர். மேலும், போட்டியின்றி மேயரைத் தேர்வு செய்ய, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், போட்டி வேட்பாளராக பவுல்ராஜ் மனு தாக்கல் செய்தார். இதனால், கட்சித் தலைமை அதிர்ச்சிக்கு உள்ளானது.

திமுக அறிவித்த அதிகாரபூர்வ வேட்பாளர் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றார். அதேநேரத்தில், போட்டி வேட்பாளர் பவுல்ராஜ் திமுக தரப்பில் 13, மற்ற கட்சிகள் சார்பில் 10 என 23 வாக்குகள் பெற்றார். திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக வாக்களித்த 13 திமுக கவுன்சிலர்கள் யார் என்பது குறித்து, மாவட்ட பொறுப்புஅமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் மற்றும் அப்துல்வகாப் எம்எல்ஏ ஆகியோரிடம், கட்சித் தலைமை விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் புதிய மேயருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சிக்கு கடந்த 2022-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி 96 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 3 இடங்களிலும், 1 இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து 19- வது வார்டு திமுக கவுன்சிலரான கல்பனா ஆனந்தகுமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு கவுன்சிலர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய
கிளம்பியது. இந்த நிலையில் கல்பனா உடல்நிலை காரணமாக திடீரென தனது மேயர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.

இதனால் மாநகராட்சிக்கு புதிய மேயர் தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29-வது வார்டு திமுக கவுன்சிலர் ரங்கநாயகி கட்சி தலைமையில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளார். நெல்லையைத் தொடர்ந்து கோவையில் நடைபெறும் மேயர் தேர்தல் முடிவை திமுக தலைமை பரபரப்புடன் எதிர்நோக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE