சென்னை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் யுவராஜ், நாராயணன், தீனன், காமராஜ் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகுகடந்த 11 மாதங்களாக மணல் குவாரிகள் நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளன. அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, தாமதமின்றி மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும்.
கட்டுமானத்துக்கு சவுடு மண்ணுக்கு கூடுதல் தேவை இருப்பதால் சவுடு மண் குவாரிகளையும் அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். ஆந்திராவில் இருந்து ஆற்று மணல் கொண்டுவர தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
மூடிக்கிடக்கும் 17 மணல் குவாரிகள் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் வரும் 8-ம் தேதி காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மறுநாள் 9-ம் தேதி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.