8 மாத நிலுவை சம்பளம் கோரி பிணத்திடம் மனு அளிக்கும் போராட்டம் - பெரம்பலூரில் சலசலப்பு

By அ.சாதிக் பாட்சா

பெரம்பலூர்: 8 மாத சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், பிணத்திடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக ஊழியர்கள் 8 மாத சம்பள நிலுவை தொகை வழங்கக்கோரி கடந்த 22-ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 15 நாட்களாக நடைபெறும் கவுரவ விரிவுரையாளர்களின் தொடர் போராட்டத்தால் வகுப்புகள் நடக்காமல் கல்வி கற்றல் திறன் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகள் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து 7 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்களது கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தாத தமிழக அரசு, பாரதிதாசன் பல்கலைக் கழகம் ஆகியவற்றைக் கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக ஊழியர்கள் நேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிணத்திடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கும்வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சந்திர மவுலி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE