பாஜக நிர்வாகி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிக்கை: சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

By இ.ஜெகநாதன்

சிவகங்கை: பாஜக நிர்வாகி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

சிவகங்கை அருகே வேளாங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (52). அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்த இவர், பாஜக கூட்டுறவுப் பிரிவு மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். ஜூலை 27ம் தேதி இரவு அவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது குறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து வசந்த் குமார் உட்பட 7 பேரை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை எடுக்கச் சென்ற போது எஸ்.ஐ-யை தாக்கிவிட்டு தப்ப முயன்ற வசந்த் குமாரை போலீஸார் சுட்டு பிடித்தனர்.

மேலும் கடந்த 2019ம் ஆண்டில் மேலப்பிடாவூரில் புவனேஸ்வரனை கொலை செய்தவர்களுக்கு செல்வக் குமார் மறைமுகமாக உதவி செய்ததாகவும், அந்த முன் விரோதத்தில் அவரை கொலை செய்ததாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் செல்வக்குமார் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றும், கஞ்சா விற்பவர்களால் அச்சுறுத்தல் இருந்தாகவும் சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் அவரது உறவினர்கள், வேளாங்குளம் கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து அனைவரும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்தை சந்திக்க முற்பட்டனர். குறிப்பிட்ட சிலரை மட்டுமே அனுமதிக்க முடியும் என போலீஸார் கூறியதால், கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் சமரசமாகி, குறிப்பிட்ட சிலர் மட்டும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் மனு கொடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE