ஓராண்டில் ஒரு லட்சம் கோரிக்கை மனுக்கள் - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளாக மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கூறியுள்ளார்.

விருதுநகர் அருகே உள்ள அப்பைநாயக்கன்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார். முகாமில், 5 பயனாளிகளுக்கு ரூ.1.61 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வேளாண்மைத் துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், "அனைத்து தரப்பு மக்களுக்கும் 15 அரசுத் துறைகளின் சேவைகள் எளிதில் கிடைத்திடவும், தாமதங்களை தவிர்த்திட வேண்டும் என்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கம். பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். மகளிர் உரிமைத் தொகைகள் கிடைக்க பெறாதவர்களுக்கும், முதியோர் உதவித் தொகை விண்ணப்பித்தோர்களுக்கும் தகுதியின் அடிப்படையில் விரைவாக வழங்கப்படும்” என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் பேசுகையில், "கடந்த ஓராண்டில் மட்டும் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஒரு மனுவின் மீது ஒன்றிற்கும் மேற்பட்ட துறைகள் இணைந்து தீர்வு காண வேண்டி உள்ளது. அதற்காகதான் 15 துறைகளை கண்டறிந்து, அந்த துறைகளையெல்லாம் 4 அல்லது 5 கிராமங்கள் ஒன்றாக இணைத்து ஒரு இடத்தை மையமாகக் கொண்டு பொதுவான இடத்திற்கு நேரடியாக சென்று மனுக்களை வாங்குவது மட்டுமல்லாமல், பெறக்கூடிய மனுக்களை எவ்வளவு நாளில் தீர்வு கண்டுள்ளோம் என்பதும், அதற்கான பதில் அந்தந்த மனுதாரர்களுக்கு சரியானதாக இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் இது முதல்வர் அலுவலகத்தில் ஒரு தனி பிரிவின் மூலமாக கண்காணிப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தரக்கூடிய கோரிக்கை மனுக்கள் ஒவ்வொன்றும் முழுமையாகவும், கவனமாகவும் பரிசீலிக்கப்படும்" என்று ஆட்சியர் ஜெயசீலன் கூறினார்.

இந்த முகாமில், சாத்தூர் கோட்டாட்சியர் சிவகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE